மலையகத்தின் சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர்களுள் ஒருவரான தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் தலைவர் டி ஐயாத்துரை காலமானார்.
இந்நிலையில் ஐயாத்துரை அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாதது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுசெயலாளர் செபஸ்டியன் பிலிப் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் தலைவர் டி ஐயாத்துரை அவர்களின் மறைவு குறித்து விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“ ஐயாத்துரை அவர்கள் 1965ம் ஆண்டு வி கே வெள்ளையன் தொழிலாளர் தேசிய சங்கத்தினை ஆரம்பித்தபோதே அமைப்பில் இணைந்துக்கொண்டார்.
ஒரு தோட்டத்தொழிலாளியான இவர் தொழிலாளர் தேசிய சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது இளைஞரணி தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
தொடர்ச்சியாக அமைப்பில் நம்பிக்கையோடும் அர்ப்பணிப்போடும் செயற்பட்டவர் 1972ம் ஆண்டு தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
2000 ஆண்டு வரை தொடர்ச்சியாக தலைவராக செயற்பட்டதோடு மத்தியமாகாண சபை உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டு 5 ஆண்டு காலம் சேவை புரிந்துள்ளார்.
ஒரு தோட்டத்தொழிலாளியாக இருந்து பெரிய ஸ்தாபனத்தின் தலைவராகவும் மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டமைக்கு அவருடைய உண்மையான உழைப்பே காரணமாகும்.
35 வருடங்கள் அமைப்போடு செயற்பட்டவர் இயற்கை எய்தியுள்ளார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது எனவும் தெரிவித்துள்ளார்.
