இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கை யாத்திரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், தகுதியுடைய குழுக்களுக்கு கட்டணமில்லா (Gratis) அடிப்படையில் விசாக்கள் வழங்கப்படும் என்றும் கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை (24) வெளியிட்ட அறிக்கையில், இலங்கை மக்களுக்கு விரைவாகவும் சிரமமின்றியும் விசாக்களை வழங்குவதை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், பொதுமக்கள் இந்தியாவின் ‘இ-விசா’ (e-visa) வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய தூதரகத்தின் மூலம் விண்ணப்பிக்கும் இலங்கையர்கள், கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்திய தூதரக விண்ணப்ப மையங்கள் (ICAC) மூலமாக தங்களது ஒன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தியாவிற்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் இலங்கையர்களுக்கான விசாக்கள் மிக விரைவாக வழங்கப்பட்டு வருகின்றன. புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட யாத்திரைக் குழுக்களுக்குக் கட்டணமில்லா விசாக்கள் வழங்கப்படுவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
விசா சேவை வழங்கும் முகவர் நிறுவனம் மாற்றப்பட்டதால் கட்டணமில்லா விசா வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும், ஜூலை 7, 2026 முதல் புதிய சேவை நிறுவனம் செயல்படத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, இந்த வசதி மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாத்திரைக்கான விசா கோரிக்கைகள் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சகத்தின் மூலமாகவே அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10 அல்லது அதற்கு மேற்பட்டோர் அடங்கிய குழுவாக விண்ணப்பிக்கலாம். இந்திய அரசின் புதிய விதிகளின்படி, கைரேகை மற்றும் உயிரியல் அடையாளப் பதிவுக்காக (Biometric) விண்ணப்பதாரர்கள் குழுவாகவோ தனித்தனியாகவோ ICAC மையங்களுக்குச் செல்ல வேண்டும்.
இருப்பினும், இந்த உயிரியல் அடையாளப் பதிவு 12 முதல் 70 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கட்டாயமாகும்.
மேலும், ICAC மையங்களுக்கு வரும் முதியவர்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் வகையில், அவர்களது பயோமெட்ரிக் பதிவை விரைவாக முடிப்பதற்கான சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பிடப்பட்டுள்ள சரியான நடைமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கும் இலங்கை யாத்திரீகர்களுக்கு விசா கட்டணம் எதுவுமில்லை. இருப்பினும், விண்ணப்ப மையத்தின் சேவைக்காக (ICAC) இலங்கை ரூபாய் 1,855 சேவைக்கட்டணமாக செலுத்தப்பட வேண்டும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
