இலங்கையில் விலங்குகளை நேசித்தல், அவற்றைப் பாதுகாத்தல், அவற்றுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுக்காக சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய விலங்கு நலச் சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
விலங்குகள் மீது கருணை மற்றும் சரியான கவனத்தைச் செலுத்துவதையும், அவற்றின் நல்வாழ்வை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்தச் சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ளது.
விலங்கு நலன் என்பது வெறுமனே அவற்றைத் தாக்காமல் இருப்பதுடன் முடிந்துவிடாமல், அவற்றுக்குத் தேவையான உணவு, சுத்தமான நீர் மற்றும் பொருத்தமான இருப்பிடத்தை வழங்குவதையும் உள்ளடக்கியது.
விலங்குகளுக்கு உணவோ நீரோ வழங்காதிருத்தல், தகுதியற்ற விலங்குகளை வேலையில் ஈடுபடுத்துதல், அளவுக்கு அதிகமாக வேலை வாங்குதல் மற்றும் தேவையற்ற துன்பங்களை விளைவித்தல் போன்ற செயல்கள் குற்றங்களாகக் கருதப்படும். வேண்டுமென்றே செய்யும் கொடூரச் செயல்கள் மட்டுமன்றி, அடிப்படைப் பராமரிப்பைக் வழங்கத் தவறுவதற்கும் இனி சட்டப் பொறுப்பு ஏற் படுத்தப்படும்.
இப்புதிய விதிகளின்படி, விலங்குகளைக் கொடுமைப்படுத்துவோருக்கு ரூபா 250,000 வரை அபராதமும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
விலங்கைக் கொடூரமாகக் கொல்லும் குற்றத்திற்கு ரூபா 500,000 வரை அபராதமும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வழியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நோயுற்ற செல்லப்பிராணிகளைக் கைவிடுதல், பொது இடங்களில் இறக்க விடுதல், தகுதியற்ற நபர்களால் மருத்துவ சிகிச்சை அளித்தல் மற்றும் சட்டவிரோதக் கருத்தடை போன்ற செயல்களுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விலங்குகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் சண்டைகள், வேட்டை விளையாட்டுகள் போன்றவற்றை நடத்துவது, அதற்கு வசதி செய்து தருவது அல்லது விளம்பரம் செய்வதும் குற்றமாகும்.
அத்துடன், விலங்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் போது துன்புறுத்தினால் ரூபா 300,000 வரை அபராதமும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
செல்லப்பிராணி விற்பனை மற்றும் இனப்பெருக்க நிலையங்களை முறைப்படுத்த அனுமதிப்பத்திர முறையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
விவசாய மற்றும் கால்நடை அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுச் சட்டமா அதிபரின் அனுமதியைப் பெற்ற இச்சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இச்சட்டம் அமுலுக்கு வந்தால் தெளிவான பாதுகாப்புச் சூழல் உருவாகும் என்றாலும், வெறும் சட்டங்களால் மட்டுமே விலங்குகளைப் பாதுகாத்துவிட முடியாது. விலங்குகள் மீது பொறுப்புடன் நடப்பதும், கருணையுள்ள அணுகுமுறையைச் சமூகத்தில் வளர்ப்பதுமே இதன் முதன்மை நோக்கமாகும்.










