சிரியா, பல நாடுகளின் பங்களிப்புடன் இஸ்ரேலுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்குத் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக சிரிய அதிபர் அகமத் அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா தொலைக்காட்சியின் ‘அல் முகாபலா’ (Al Muqabala) நிகழ்ச்சிக்கான சிறப்பு நேர்காணலில் கருத்து வெளியிட்ட அல்-ஷாரா, இஸ்ரேலுடனான இந்த ஒப்பந்தம் ஒரு விரிவான அமைதிக்கான நுழைவுவாயிலாக அமையும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
மேலும், 1973 முதல் இஸ்ரேலால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோலான் குன்றுகள் (Golan Heights) மீதான சிரியாவின் உரிமையில் இத்தகைய ஒப்பந்தம் எந்தச் சமரசமும் செய்யாது என்றும் அவர் உறுதி அளித்தார்.
இஸ்ரேலுடனான எந்தவொரு மோதலையும் சிரியா தவிர்த்து வருவதாகவும், இந்த பாதுகாப்பு ஏற்பாடானது நெருக்கடிக்கு விரிவான தீர்வை ஏற்படுத்த வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
டிசம்பர் 2024-இல் பாஷர் அல்-அசாத் அரசாங்கம் வீழ்ந்ததைத் தொடர்ந்து அல்-ஷாரா ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தெற்கு சிரியாவில் இஸ்ரேல் தொடர்ந்து ஊடுருவல்களையும் தாக்குதல்களையும் நடத்தி வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.










