கைவிடப்பட்ட நிலையில் இருந்த தலவாக்கலை ‘ஹெல பொஜூன்’ உணவகம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு

சுற்றுலா துறையின் முன்னேற்றத்தையும், பிரதேச மக்களின் பொருளாதார நலனையும் மேம்படுத்தும் நோக்கில் தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில், தலவாக்கலை நகரசபைக்கு அண்மையில் அழகிய சூழலில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹெல பொஜூன்’ தேசிய உணவகம், கடந்த நான்கு ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தேசிய உணவகம், 2022 ஆம் ஆண்டு அப்போதைய தலவாக்கலை நகரசபைத் தலைவர் பாரதி தாசன் வேண்டுகோளின் பேரில், முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 60 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது.

எனினும், ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிர்வாக மற்றும் உரிமைச் சிக்கல்களால், இந்த கட்டிடம் கடந்த நான்கு ஆண்டுகளாக பயன்பாடின்றி கைவிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தற்போதைய லிந்துலை – தலவாக்கலை நகரசபைத் தலைவர் உபாலி லியனகே விளக்கமளிக்கையில், குறித்த காணி நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கட்டுப்பாட்டிலிருந்து, கொத்மலை மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தின் கீழ் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமானதாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால், ஆரம்பத்தில் திட்டத்தை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

எனினும், தற்போது கழிவுகளை முறையாக அகற்றுதல், கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதைத் தொடர்ந்து உணவகத்தை முழுமையாக புனரமைத்து, விரைவில் ‘ஹெல பொஜூன்’ தேசிய உணவகமாக மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்காக ஒரு கோடி ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொது மக்களின் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வாறான அரச கட்டிடங்கள் நீண்டகாலம் பயன்பாடின்றி கைவிடப்படுவது அரச வளங்களின் வீணடிப்பாகும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேவேளை, இத்திட்டம் மீண்டும் செயற்பாட்டுக்கு வந்தால், உள்ளூர் விவசாயிகள் மற்றும் சுயதொழில் முனைவோருக்கு சந்தை வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கும் தரமான பாரம்பரிய உணவுகளை வழங்கும் மையமாக இது உருவாகும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

எது எவ்வாறாயினும், மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துக்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு, மக்கள் நலனுக்காக முழுமையாக பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முக்கிய பொறுப்பாகும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மலைவாஞ்ஞன்

Related Articles

Latest Articles