வாஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பை இன்று பிற்பகல் சந்திக்கவுள்ள நிலையில், அச்சந்திப்பின் போது ஈரான் விவகாரமே முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள நெதன்யாகு:
“எங்களது சந்திப்பின் போது, மேசையிலுள்ள அனைத்து முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவுள்ளோம். அதில் ஈரான் விவகாரமே முதன்மையானதாக இருக்கும்.
இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வதும், அதன் பலத்தைப் பெருக்குவதும், நம்மைச் சுற்றியுள்ள அமைதி வட்டத்தை விரிவுபடுத்துவதுமே எங்களது தெளிவான இலக்காகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தைத் தொடங்கியதில் இருந்து, அவருடன் நடைபெறும் 8-வது சந்திப்பு இதுவாகும் என்றும், “வேறு எந்தவொரு சர்வதேசத் தலைவரை விடவும் அதிக முறை சந்தித்த சந்திப்பு இதுவே” என்றும் நெதன்யாகு விவரித்துள்ளார்.
அத்துடன், “நான் மற்றொரு நோக்கத்திற்காகவும் பயணம் மேற்கொள்கிறேன்: எனது உண்மையான நண்பரும், அனைத்துக் காலக்கட்டத்திலும் இஸ்ரேலின் மாபெரும் நண்பர்களில் ஒருவருமான லின்ட்சே கிரகாம் (Lindsey Graham) அவர்களுக்கு எனது இறுதி மரியாதையைச் செலுத்துவதற்காகவே இப்பயணம்” என்றும் நெதன்யாகு மேலும் சேர்த்துக் கூறியுள்ளார்.
