திருகோணமலையில் சைவ முறைப்படி கரம்பிடித்த வெளிநாட்டு தம்பதி

கிழக்கிலங்கையின் எழில் கொஞ்சும் திருகோணமலைச் மண்ணில், செக் குடியரசைச் (Czech Republic) சேர்ந்த வெளிநாட்டுத் தம்பதியினர் இருவர் தமிழ் சைவ நெறிமுறைப்படி கோலாகலமாகத் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

திருகோணமலை, சாம்பல்தீவு பகுதியில் அமைந்துள்ள ‘பாம் பீச் ரிசோர்ட்’ விடுதியில் இந்த திருமணம் நடைபெற்றது.

செக் குடியரசைச் சேர்ந்த மைக்கேல் (Michael) மற்றும் சாண்ட்ரா (Sandra) ஆகிய இருவரே, யோகாசன குருவான ‘சிவதிரு’ கலியுகவரதன் தலைமையில் சைவ முறைப்படி கரம்பிடித்தனர்.

தாலிக்கு பதிலாக உருத்திராட்சம்!

திருமணச் சடங்குகளின் போது, “தங்களின் இறுதி மூச்சு வரை இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவருக்கொருவர் உண்மையாகவும் அன்பாகவும் வாழ்வோம்” எனத் தெய்வத்தின் முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து, பாரம்பரியத் தாலிக்கு பதிலாக, யோகாசன குருவால் ஆசீர்வதித்து வழங்கப்பட்ட புனித உருத்திராட்ச மணியினை மணமகன் மணமகளுக்கு அணிவித்தார். மேலும், புதுமணத் தம்பதிகளின் இல்லற வாழ்வு சிறக்க குருவினால் அவர்களுக்குச் சிவலிங்கம் ஒன்றும் ஆசீர்வாதமாக வழங்கப்பட்டது.

10-வது சைவத் திருமணம்

யோகாசன குரு கலியுகவரதன் அவர்களினால், இந்த விடுதியில் வைத்து வெளிநாட்டினருக்குச் சைவ நெறிப்படி நடத்தி வைக்கப்படும் 10-வது திருமணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விசேட நிகழ்வுக்குப் பின்னணியில் விடுதியின் உரிமையாளரான ‘மறெக் நெமெக்’ (Marek Nemeck) என்பவரின் ஆன்மீக ஈடுபாடே முக்கியக் காரணமாகும். செக் குடியரசைச் சேர்ந்த இவர், யோகக் கலையைப் பயில்வதற்காகத் திருகோணமலைக்கு வந்தபோது யோகாசன குரு கலியுகவரதனுடன் நட்பு ஏற்பட்டது. இதனால் ஈர்க்கப்பட்ட அவர், சைவ வாழ்வியல் முறைகள் மீது மிகுந்த நாட்டம் கொண்டார்.

அதன் தொடர்ச்சியாகவே, தனது தாய்நாடான செக் குடியரசிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, சைவ கலாசார முறைப்படியான திருமண பந்தத்தைத் தனது விடுதியிலேயே குரு கலியுகவரதன் மூலமாகச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றார்.

தமிழர் பாரம்பரியமும் சைவ நெறியும் உலகளவில் வெளிநாட்டினரையும் வசியப்படுத்தி வருவதை இந்நிகழ்வு மீண்டும் நிரூபித்துள்ளது.

Related Articles

Latest Articles