வீதியோரங்களில் உள்ள சில உணவகங்கள், இறைச்சி உணவுகளின் சுவையை அதிகரிப்பதற்காகக் கஞ்சா இலைகளைப் பயன்படுத்துவதாக வரும் தகவல் குறித்துப் பேராதனை போதனா வைத்தியசாலையின் தடயவியல் மருத்துவ அதிகாரி (JMO) மருத்துவர் பாலித பண்டார சுபசிங்க கவலை தெரிவித்துள்ளார். இது சட்டவிரோதமானது என்பதோடு, வாகன ஓட்டிகளுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அறியாமல் இத்தகைய உணவை உட்கொள்ளும் வாகன ஓட்டுநர்கள், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்போது கஞ்சா உபயோகித்ததாக நேர்மறை முடிவுகள் (positive) வரக்கூடும். இதனால், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களாக இல்லாவிட்டாலும், சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.
“நான் ஒருபோதும் போதைப்பொருள்களைப் பயன்படுத்தியதில்லை என்று உறுதியாகக் கூறும் ஓட்டுநர்களின் சிறுநீர் மாதிரிகளை மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அவற்றில் கஞ்சா மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன” என்று மருத்துவர் சுபசிங்க கூறினார்.
நீண்டதூரம் பயணம் செய்யும் மற்றும் கனரக வாகன சாரதிகள் பலரும் தங்களின் நாளாந்த உணவுக்கு வீதியோர உணவகங்களையே பெரிதும் நம்பியுள்ளனர். இவ்வாறான உணவில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இரகசியமாகச் சேர்க்கப்படும்போது இந்த வாகன சாரதிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் விளக்கினார்.
அறியாமல் கஞ்சா கலந்த உணவை உட்கொண்ட அப்பாவி வாகன சாரதிகள், போதையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட வாய்ப்புள்ளதால், இது தீவிரமான சட்ட மற்றும் பொது சுகாதாரப் பிரச்சினையை எழுப்புவதாக மருத்துவர் சுபசிங்க எச்சரித்தார்.
உணவுத் தயாரிப்பில் கஞ்சாவைப் பயன்படுத்தும் உணவகங்களைக் கண்டறிந்து வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளவும், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் (PHIs) ஏனைய அதிகாரிகளுக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“உணவு தயாரிப்பில் கஞ்சாவைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது மட்டுமன்றி, எதுவும் அறியாத நுகர்வோரைத் தீவிரமான சட்டரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாக்குகிறது” என்று அவர் வலியுறுத்தினார்.










