இலங்கைக்கான புதிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேய குல்கர்னிக்கும் (Maitrey Kulkarni) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று இன்று (29) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பிலும், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் இரு தரப்பினருக்கும் இடையில் இங்கு ஆழமான பல கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
கடந்த வருட இறுதியில் இலங்கைக்கு ஏற்பட்ட ‘டித்வா’ (Ditwa) அனர்த்த நிலைமையின் போது, அயல் நாடு என்ற முறையில் இந்தியா பெற்றுத் தந்த துரிதமான மற்றும் மனிதாபிமான உதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , 220 இலட்சம் மக்கள் சார்பாகவும் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.
அவ்வாறே, கொவிட்-19 தொற்றுநோய் பரவற் காலத்திலும், பொருளாதார நெருக்கடியின் பொழுதும் நெருங்கிய அயல் நாடொன்றாக இந்தியா இலங்கைக்கு நல்கிய பெறுமதியான ஆதரவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது விசேடமாகப் பாராட்டுத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும், பரஸ்பர நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்திலும் அபிவிருத்தி, பொருளாதாரம் மற்றும் மக்கள் நலன்புரித் துறைகளில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது இரு தரப்பினரும் அவதானம் செலுத்தினர்.










