இந்தியாவில் நடந்த இளைஞர் புரட்சியை மறந்துவிடாதீர்: அரசுக்கு சஜித் எச்சரிக்கை

நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைபொம்மையாக்கிக் கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கே ஆணை வழங்கப்பட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள காணொளி பதிவியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு ,

“நீதிமன்றம் என்ற ஜனநாயகத் தூணை அழிப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செயற்படுவது வெட்கக்கேடான செயலாகும். சட்டம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களின் மீதே ஜனநாயகம் நிலைநிறுத்தப்படுகின்றது.

அவ்வாறே இவற்றின் அதிகாரங்களுக்கு இடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகளும் அமைந்து காணப்படுகின்றன.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கோ அல்லது நீதி அமைச்சருக்கோ சரியான புரிதல் இல்லையெனில், மொன்டெஸ்கிவின நூலைப் படித்துப் பார்க்குமாறு நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

உலகின் பல நாடுகளில், பல்வேறு சந்தர்ப்பங்களில், அதிகாரத்தில் இருக்கும் அரசியல் அதிகார பீடங்கள் நீதிமன்றத்திலும் சட்டத்துறையிலும் தலையிட முயன்றுள்ளன. அண்மையில் இந்தியாவில் நடந்த சம்பவங்களை மறந்துவிட வேண்டாம் எனத் தற்போதைய அரசாங்கத்திற்கு ஞாபகமூட்டிக்கொள்கிறேன்.

அண்மையில் இந்தியாவில் வேலையற்ற இளம் சந்ததியினரை கரப்பான் பூச்சிகள் எனக் அவமதித்ததன் காரணமாக, இலட்சக்கணக்கான இந்திய இளைஞர்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்குச் சென்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தனர்.

பரீட்சை வினாத்தாள் பரீட்சைக்கு முன்பாக வெளியானது தொடர்பில் கல்வி அமைச்சர் தனது பொறுப்பையும் கடமையையும் ஏற்று தனது பதவியை இராஜினாமா செய்தார். இந்திய அரசாங்கம் தற்சமயம் கல்வியில் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்களை இளைஞர்களின் அழுத்தத்தின் பேரிலேயே செய்து வருகின்றது.

ஆகையினால், இந்தியாவின் இளம் சந்ததியினர் கரப்பான் பூச்சிகள் என வர்ணிக்கப்பட்ட சமயத்தில் அவர்கள் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கவில்லை. பொறுப்புக்கூறலையும் கடப்பாட்டையும் காட்டுவதற்கு மாபெரும் மக்கள் சக்தி ஒன்றை உருவாக்கினர்.

இந்தத் திருத்தங்கள் ஊடாக நமது நாட்டின் கனம் நீதிமன்றத்தையும் கனம் நீதிபதிகளையும் அவமதிக்கும் வேளையில், அவர்களின் நம்பகத்தன்மையை, அவர்களின் நற்பெயருக்கு சேறு பூசி, நற்பெயரைக் களங்கப்படுத்தும் வேலைகளை ஆளும் தரப்பினர் செய்து வருகின்றனர்.

நமது நாட்டைச் சேர்ந்த இளைஞர்களும் வெறுமனே வாயை மூடிக்கொண்டு பார்த்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இளைஞர்களும், சிவில் சமூகமும், பொதுமக்களும் இணைந்து இந்த சர்வாதிகார ஒருதலைபட்சமான போக்கில் அமைந்து காணப்படும் இந்த திருத்தங்களை மக்கள் பலத்தால் தோற்கடிக்கத் தயாராகுவார்கள்.

ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறோம் என்று கூறிக்கொண்டு, கனம் நீதிமன்றத்தின் சுயாதீனத்தை வலுப்படுத்தும் பெயரால், வினைத்திறனான நீதியை நிலைநாட்டும் செயல்முறையொன்றை உருவாக்கும் பெயரால் கொண்டுவரப்படும் சர்வாதிகாரச் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துங்கள்.

நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தி, ஜனநாயகத்தின் முத்தூண்களுக்கு இடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகளை வலுப்படுத்துவதுடன், சுதந்திர ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகங்கள் என்ற தூண்களையும் வலுப்படுத்தி, நாட்டின் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும்.

கனம் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை வலுப்படுத்தி ஜனநாயகத்தை உயிரை விட அதிகமாகப் பாதுகாக்க வேண்டும். ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற சமூக இணக்கப்பாட்டை மறந்துவிடாமல் செயலுக்கு கொண்டு வர வேண்டும்.

இந்தச் செயற்பாட்டை நிறைவேற்றும் வரை பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியும் கனம் நீதிமன்றத்தைப் பாதுகாக்கத் தயார். இதன் பொருட்டு எந்தவொரு தியாகத்திற்கும் முகம்கொடுக்க நாம் தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles