மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்றின் நிர்மாணப் பணியின்போது தூண் இடிந்து விழுந்ததில், 28 வயதுடைய கட்டடத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மட்டக்களப்பு, ஜெயந்திபுரம், யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி, நூரானியா மையவாடி – முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடு ஒன்றில், சம்பவ தினமான நேற்று பிற்பகல் மேற்படி கட்டடத் தொழிலாளி கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள தூண் ஒன்று இடிந்து அவர் மீது விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு நீதிமன்ற அனுமதியைப் பெற்று, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
