பெந்தோட்டையில் நேற்று மாலை பாராசெயில் சவாரியின்போது 31 வயதான பாலஸ்தீன பெண் ஒருவர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து புதன்கிழமை (29) மாலை பெந்தோட்டை கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்தது.
பெந்தோட்டை கடற்கரை வீதியில் இயங்கும் தனியார் நிறுவனம் ஒன்றினால் இயக்கப்படும் பொழுதுபோக்கு பாராசெயில் சவாரியின் போது, பாராசெயில் திடீரென கடலில் விழுந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தின் போது பாராசெயிலில் பயணித்த பாலஸ்தீன பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேவேளை, பாராசெயிலை இயக்கிய கொலம்பியா நாட்டைச் சேர்ந்த நபர் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பெந்தோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










