மலையகத்தின் தலைநகரமாகவும் நுவரெலியா மாவட்டத்தின் நுழைவாயிலாகவும் பார்க்கப்படும் ஹட்டன் நகரின் இதயப் பகுதியாக விளங்குவது பிரதான பஸ் தரிப்பு நிலையமாகும். ‘சமாதான நகரம்’ என்றும், மகாத்மா காந்தி வருகை தந்து அமர்ந்த வரலாற்றுப் பெருமை கொண்ட நகரம் என்றும் போற்றப்படும்; ஹட்டன், தினமும் ஆயிரக்கணக்கான மக்களும் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் முக்கிய போக்குவரத்து மையமாக திகழ்கிறது.
சர்வதேச புகழ்பெற்ற சிவனொளி பாதமலை , சென் கிளையார்; மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகள், எல்ல சமவெளி, வரலாற்றுச் சிறப்புமிக்க சீதையம்மன் ஆலயம், காயத்திரி பீடம் உள்ளிட்ட பல சுற்றுலா மற்றும் சமயத் தலங்களுக்கு பயணிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பிரதான இணைப்புத் தளமாகவும் இந்த பஸ் தரிப்பு நிலையம் காணப்படுகிறது.
தற்போது ஹட்டனில், 1986ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் தரிப்பு நிலையமும், 2007ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தனியார் பஸ் தரிப்பு நிலையமும் ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன.
எனினும், இவ்விரு நிலையங்களும் பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக மழைக்காலங்களில் பஸ் தரிப்பு நிலையம் முழுவதும் நீர் தேங்கி, பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. வளாகம் முழுவதும் குப்பைகள் மற்றும் வெற்றிலை எச்சில்கள் சிதறிக்கிடப்பதுடன், மழைநீர் வடிகால்கள் குப்பைகளால் அடைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.
அத்துடன், போதுமான மற்றும் பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால், சிலர் பஸ் தரிக்கும் பகுதிகளிலேயே சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது உள்ள பொது கழிப்பறைகளும் போதிய சுகாதார பராமரிப்பின்றி காணப்படுவதால், பயணிகளும் பொதுமக்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் இப்பஸ் தரிப்பு நிலையத்தை முழுமையாக நவீனமயமாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் வர்த்தகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும், 2016ஆம் ஆண்டில் சில தற்காலிக மற்றும் மேலோட்டமான திருத்தப் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும், நிரந்தர தீர்வுகள் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனிடையே, புதிய அரசாங்கம் ஹட்டன் நகர அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாவை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியிருந்தாலும், பஸ் தரிப்பு நிலையத்தை புனரமைக்கும் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, மலையகத்தின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தை நவீன வசதிகளுடன் கூடிய சுத்தமான, பாதுகாப்பான மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற வகையில் உடனடியாக புனரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
மலைவாஞ்ஞன்











