இரு வேறு விபத்துகளில் நால்வர் பலி

கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு கட்டானா, தாகொன்ன பகுதியில் இன்று அதிகாலை 1:45 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கட்டானா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சரக்கு ஏற்றிச் சென்ற லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், நீர்கொழும்பு தாகொன்ன வீதியைச் சேர்ந்த 18 வயதான தலிஷ நிம்னெத் சிறிவர்தன மற்றும் தாகொன்ன, நீர்கொழும்பு வீதியைச் சேர்ந்த 19 வயதான கவிது ஹஷான் சோமதிலக்க ஆகிய இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

விபத்தையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விபத்துக்குக் காரணமான கொள்கலன் லொறிக்குத் தீ வைத்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாகச் செயற்பட்ட கட்டானா பொலிஸ் நிலைய அதிகாரிகளும், நீர்கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த முரண்பட்ட மக்களைக் கட்டுப்படுத்தி நிலைமையைச் சீரமைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

அதேவேளை, யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இன்று அதிகாலை காய்கறிகளை ஏற்றிச் சென்ற கேப் வண்டி (Cab) ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி காய்கறி சுமையுடன் பயணித்த கேப் வண்டி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டுநர் தூங்கியமையினாலேயே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக சடலங்கள் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles