காசாவில் ஆயுதக் களைவு? ‘அமைதிக்கான சபை’ ஒப்பந்தம் செய்துள்ளதாக டிரம்ப் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் காசாவிலுள்ள பிற ஆயுதமேந்திய குழுக்களை முழுமையாக ஆயுதக் களைவு (disarmament) செய்வதற்கான ஒப்பந்தத்தை தனது ‘அமைதிக்கான சபை’ (Board of Peace) எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

காசாவில் இஸ்ரேலின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் 20 அம்சத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் இது ஒரு முக்கிய மைல்கல் என்று ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் பல கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் என்றும், ஆயுதக் களைவு நடக்கும்போது இஸ்ரேலியப் படைகள் வெளியேறும் என்றும், காசாவின் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய பாலஸ்தீனக் காவல் படையுடன் இணைந்து சர்வதேச ஸ்திரத்தன்மைப் படை (International Stabilization Force) செயல்படும் என்றும் டிரம்ப் கூறினார்.

மத்தியஸ்தம் வகித்த எகிப்து, கட்டார், துருக்கி ஆகிய நாடுகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

“பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக அமைதிக்கான சபையுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றும் ஒரு புதிய பாலஸ்தீன அரசாங்கத்தால் காசா இறுதியாக நிர்வகிக்கப்படுவதை நோக்கிய இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான கட்டமாகும்,” என்று டிரம்ப் கூறினார்.

“அதே நேரத்தில், இஸ்ரேலும் அதற்குத் தகுதியான பாதுகாப்பைப் பெறும்,” என்றும் டிரம்ப் மேலும் குறிப்பிட்டார்.

முன்னதாக, அமெரிக்கா மத்தியஸ்தம் வகித்த காசா அமைதித் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து கெய்ரோவில் மத்தியஸ்தர்களுக்கும் ஹமாஸ் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்தன; இருப்பினும் முன்மொழியப்பட்ட நிபந்தனைகள் திருப்திகரமாக இல்லை என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறினார்.

Related Articles

Latest Articles