பதுளை கல்வி வலயத்தில் அமைந்துள்ள பாரதி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 1957 ஆம் ஆண்டு காலம் தொடக்கம் இவ்வருடத்தின் ஜுலை 31 ஆம் திகதி வரை பாடசாலையில் கடமையாற்றி ஓய்வுபெற்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி கெளரவிக்கும் “பாரதி மாண்பின் மகுட விழா” நிகழ்வு நாளை ஆகஸ்ட் 01ஆம் திகதி பதுளையிலுள்ள ஊவா மாகாண சபை நூலக கேட்போர் கூடத்தில் பாடசாலையின் அதிபர் எஸ். திருச்செல்வம் தலைமையில் இடம்பெறவுள்ளதாக பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் என். சத்தியராஜ் தெரிவிக்கின்றார்.
இந்நிகழ்வு குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்; நிகழ்வின் பிரதம அதிதியாக ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் என். வெங்கடேஸ்வரன் கலந்து கொள்ள உள்ளதோடு சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் ஓய்வு நிலை பீடாதிபதி சி.ராஜேந்திரன் கலந்து கொள்ளவுள்ளார். கெளரவ அதிதிகளாக அயற் பாடசாலை அதிபர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் பாரதி மாண்பின் மகுட விழாவை சிறப்பித்து பாரதி கல்லூரியின் நிறுவனர் அமரர் பாரதி இராமசாமியின் சேவையை போற்றும் வகையில் நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளதுடன் கலாசார ஊர்வலம், கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார்.
பசறை நிருபர்











