பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவியும், பிரித்தானிய திரைப்படத் தயாரிப்பாளருமான ஜெமிமா கோல்ட்ஸ்மித் (Jemima Goldsmith), ஆஸ்திரேலிய நிதியாளரான கேமரூன் ஓ’ரெய்லியை (Cameron O’Reilly) திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இம்ரான் கானைப் பிரிந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் மறுமணம் செய்துள்ளார்.
52 வயதான ஜெமிமா மற்றும் 62 வயதான கேமரூன் ஆகியோரின் திருமணம் வாரயிறுதியில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.
ஜெமிமாவின் அண்ணி ஜெமிமா ஜோன்ஸ், திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “ஜெமிமா மற்றும் கேமரூனின் திருமணத்தைக் கொண்டாடுகிறோம், மிகவும் மகிழ்ச்சியான நாள்” என்று பதிவிட்டு இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.
திரைப்படம் மற்றும் ஆவணப்படங்கள் மீதான பொதுவான ஆர்வம் காரணமாக இவர்கள் இருவரும் சந்தித்துப் பழகியதாகக் கூறப்படுகிறது.
ஜெமிமா தனது 21 ஆவது வயதில், 42 வயதான பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் கானைத் திருமணம் செய்தார்.
“நூற்றாண்டின் திருமணம்” என்று வர்ணிக்கப்பட்ட இத்திருமணத்திற்காக அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதுடன், உருது மொழியைக் கற்றுக்கொண்டு, லாகூருக்குக் குடிபெயர்ந்து இம்ரான் கானின் ‘தெஹ்ரீக்-இ-இன்சாப்’ (PTI) கட்சியின் ஆரம்பகால அரசியல் பணிகளுக்கு ஆதரவாக இருந்தார்.
இத்தம்பதியருக்கு சுலைமான் ஈசா, காசிம் ஆகிய இரண்டு மகன்மார் உள்ளனர். 9 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, இவர்கள் இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன் பிரிந்தனர்.
இம்ரான் கானின் தீவிர அரசியல் வாழ்க்கை மற்றும் பொதுமக்களின் அதிகப்படியான கவனிப்பு காரணமாக ஜெமிமாவால் பாகிஸ்தான் வாழ்க்கைக்கு முழுமையாகப் பழக முடியாமல் போனதே இந்தப்பிரிவுக்குக் காரணம் என இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.
பிரிவுக்குப் பிறகு, லண்டன் திரும்பிய ஜெமிமா, திரைக்கதை எழுத்தாளராகவும் ஆவணப்படத் தயாரிப்பாளராகவும் வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.
திருமண உறவு முடிந்தபோதிலும், இருவரும் பரஸ்பர மரியாதையுடன் கூடிய பிணைப்பைத் தொடர்ந்து பேணி வருகின்றனர்.
பாகிஸ்தான் மீது தனக்கு இருக்கும் ஆழமான அன்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் ஜெமிமா, விருது பெற்ற தனது ‘வாட்ஸ் லவ் காட் டு டூ வித் இட்?’ (What’s Love Got to Do with It?) என்ற திரைப்படத்தைப் பாகிஸ்தானுக்குத் தான் சமர்ப்பித்த “காதல் கடிதம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை விடுவிக்கக்கோரி ஜெமிமாவும் அவரது இரு மகன்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
62 வயதான கேமரூன் ஓ’ரெய்லி, அயர்லாந்தின் பிரபல தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். நிதி, ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் வெற்றிகரமான வாழ்க்கையைக் கட்டமைத்துள்ள இவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு ‘கோல்ட்மேன் சாக்ஸ்’ (Goldman Sachs) நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கினார்.
பின்னர் ‘பேயார்ட் கேபிட்டல்’ (Bayard Capital) என்ற நிறுவனத்தை நிறுவிய இவரின் பங்கு, 2011 ஆம் ஆண்டு ‘தோஷிபா’ (Toshiba) நிறுவனத்தால் கைப்பற்றப்பட்டது.
ஆஸ்திரேலிய ஊடகத் துறையிலும் மூத்த பதவிகளை வகித்துள்ள இவர், திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு ஏற்கனவே இல்சே ஓ’ரெய்லி என்பவருடன் திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.










