” பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கேட்டேன். அது மிகவும் தரக்குறைவானதாகவும், அவமதிப்புக்குரியதாகவும் இருந்தது. அவர் எத்தகைய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க துடிக்கிறாரோ, அதையே அது பிரதிபலித்தது.
இத்தகைய மனநிலை கொண்டவர்கள் ஓர் அரசியல் கட்சியை வழிநடத்தவும், ஒரு நாள் மாநிலத்தை ஆளவும் விரும்பினால், கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.
பெண்களைத் தரக்குறைவாகப் பேசுவதையும், இழிவுபடுத்துவதையும் ஒரு அரசியல் நாடகமாகப் பார்த்து, தங்கள் ஆதரவாளர்களின் கைதட்டல், விசில் மற்றும் சிரிப்பொலியில் மகிழ்ந்து திளைப்பவர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? இதை என்னை விட வேறு யார் நன்கு அறிவார்கள்?
இத்தகைய பேச்சை சாதாரணமாகக் கருதுபவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்: பெண்களின் கண்ணியம் அரசியல் பலிகடாவாக்கப்படும்போது, எந்தவொரு குடும்பமும் (உங்கள் குடும்பம் உட்பட) அதே போன்ற நடத்தையிலிருந்து தப்ப முடியாது.
அரசியல் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், பொது விவாதங்களுக்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். பெண்கள் மதிக்கப்பட வேண்டுமே தவிர, உங்கள் விருப்பங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் ஏற்ப பயன்படுத்தப்படும் பகடைக்காய்களாக நடத்தப்படக் கூடாது.
உங்கள் அரசியல் எதிரியின் செயல்பாடு மற்றும் தலைமைத்துவத்திற்கு ஈடுகொடுக்க முடியாது என்று உங்களுக்குத் தெரியவரும்போது, தனிப்பட்ட அவதூறுகளையும் ஆபாசத்தையும் கையில் எடுப்பதே மிக எளிதாக தப்பிக்கும் வழியாகிவிடுகிறது.
உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது தந்தை மு.க.ஸ்டாலின் ஆகியோர் பல ஆண்டுகளாகப் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்துள்ளனர். ஆனால், அது பொது வாழ்க்கைக்கு ஒருபோதும் அளவுகோலாகிவிடக் கூடாது.
பொது மேடையில் திரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தனது இழிவான செயலை ஒப்புக்கொள்வாரா என்பதையும், மன்னிப்பு கேட்பதற்கான துணிச்சலும் கண்ணியமும் அவரிடம் உள்ளதா என்பதையும் பார்ப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.










