மதுபோதையில் பாடசாலை பஸ் செலுத்திய சாரதி பதுளையில் கைது

மொனராகலையிலிருந்து பதுளை நோக்கி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற தனியார் “சிசுசெரிய” (பாடசாலை சேவை) பேருந்தின் சாரதி மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் சந்தேகத்தின் பேரில் இன்று (04) காலை பதுளை தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்டவர் 35 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பேருந்து, மொனராகலை மற்றும் படல்கும்புற – பசறை
பகுதிகளில் இருந்து பதுளை நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களையும் ஆசிரியர்களையும் தினசரி ஏற்றிச் செல்லும் பாடசாலை சேவை பேருந்தாகும் .

பதுளை – பசறை பிரதான வீதியில், இரண்டாம் கட்டை உடவெல பாடசாலைக்கு அருகே, சந்தேகத்திற்கிடமான மற்றும் அபாயகரமான முறையில் பேருந்து செலுத்தியதை அவதானித்த போக்குவரத்து பொலிஸார், வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சாரதி மதுபோதையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து உடனடியாக கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட வேளையில் பேருந்தில் சுமார் 40 பாடசாலை மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பயணம் செய்து கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மீது மதுபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊவா மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஹேஷ் சேனாரத்ன, பதுளை பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் லக்ஷிரி விஜேசேன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹண, உதவி பொலிஸ் அத்தியட்சகர் வேஹித தேசப்பிரிய மற்றும் பதுளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் சானக சிரஞ்சீவ விஜேரத்ன ஆகியோரின் ஆலோசனையின் பேரில், பதுளை தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட்கள் சிசிர (41687) மற்றும் சிசிர (54078) ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

த.டிமேஷன்

Related Articles

Latest Articles