கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்பட்டிருந்த போதிலும், அவை குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இதனாலேயே பொலிஸ் மா அதிபருக்கே அச்சுறுத்தல் விடுக்கும் நிலைக்குச் சிலர் தள்ளப்பட்டுள்ளதாகவும், எத்தகைய அழுத்தங்கள் வந்தபோதிலும் விசாரணைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது:
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர், எமது நாட்டின் பொலிஸ் மா அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். தற்சமயம் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று, கடந்த காலங்களில் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிரான விசாரணைகள் மூடிமறைக்கப்பட்டன; சில வழக்கு நடவடிக்கைகள் மீளப்பெறப்பட்டிருந்தன. இவை தொடர்பிலும் தற்போது மீள விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தங்கியிருந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழுவினருக்கு எதிராகவும் சட்டரீதியான நடவடிக்கைகள் மிகக் கடுமையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில், பொலிஸ் மா அதிபரைக் கொன்றுவிடுவார்கள் என ‘சால்வை’ அணிந்துகொண்டு அரசியல் செய்பவர்கள் கூறுவதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தலை அரசாங்கம் ஒருபோதும் சாதாரண விடயமாகக் கருதாது. இது ஒட்டுமொத்த நீதித்துறைக்கும், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்குக்கும் விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தலாகும்.
எனவே, எவ்வாறான அச்சுறுத்தல்களோ அல்லது அரசியல் அழுத்தங்களோ வந்தபோதிலும் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் எவையும் நிறுத்தப்படமாட்டாது. சாட்சியங்கள் அழிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் கூடத் தேடித் பிடித்து விசாரணைகள் நடத்தப்படும். பொலிஸ் மா அதிபர் உட்பட நேர்மையாக விசாரணைகளை முன்னெடுக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் அரசாங்கம் என்றும் துணையாக நின்று பாதுகாப்பளிக்கும்” என்று அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.










