அரசமைப்பு திருத்தம் மற்றும் நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைச் சமர்ப்பிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவு ஏற்றுக்கொள்ள முடியாதது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று கூடியது.
இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், வழக்குத் தேக்கத்தைக் குறைப்பது அனைத்துத் தரப்பினரினதும் பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கும் அதேவேளையில், நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது இதற்கு ஒரு தீர்வாகாது என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் கூறும் காரணங்கள் எந்தவொரு அடிப்படை ஆதாரமும் அற்றவை என ஐக்கிய தேசியக் கட்சி வாதிட்டுள்ளது.
எனவே, உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தி, பரந்த அளவிலான கலந்தாலோசனைகள் மூலம் புதிய முறைமை ஒன்றை ஆயத்தப்படுத்தி, பின்னர் அதனை நீதி அமைச்சு சமர்ப்பிக்க வேண்டும் எனத் தீர்மானத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு முறையான வேலைத்திட்டத்திற்குத் தனது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியளித்துள்ளது.

