வேகக்கட்டுப்பாட்டை மீறியமை மற்றும் ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக இலங்கைக் காவல்துறையினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் போன்ற போலி மெசேஜ்கள், சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய டிஜிட்டல் தளங்கள் ஊடாக தற்போது பரப்பப்பட்டு வருவதாக இலங்கைக் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையின் இடைமாறல் அலகு (Interchange Unit) மூலம் புகார் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கைக் காவல்துறை, இந்தச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கைக் காவல்துறை, இதுபோன்ற ஏமாற்றுச் செய்திகள் மற்றும் இணையவழி மோசடிகள் மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளது:
எஸ்.எம்.எஸ் (SMS), மின்னஞ்சல், செய்தி அனுப்பும் செயலிகள் அல்லது அறியப்படாத இணைய இணைப்புகளைக் கொண்ட பகிரப்பட்ட செய்திகள் மூலம் வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை (Links) கிளிக் செய்ய வேண்டாம்.
எந்தவொரு இணைப்பையும் திறப்பதற்கு அல்லது பதிலளிப்பதற்கு முன், வலைத்தள முகவரியின் உண்மைத் தன்மையையும் அதை அனுப்பியவரின் அடையாளத்தையும் கவனமாக சரிபார்க்கவும்.
சரிபார்க்கப்படாத இணைப்புகள் அல்லது அறிமுகமில்லாத வலைத்தளங்கள் மூலம் தனிப்பட்ட தகவல்கள், வங்கி கணக்கு விவரங்கள், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (OTP), பின் எண்கள் (PIN) அல்லது கடவுச்சொற்களை (Passwords) ஒருபோதும் வெளிப்படுத்த வேண்டாம்.
இத்தகைய தகவல்களின் துல்லியத்தை இலங்கைக் காவல்துறையின் உத்தியோகபூர்வ ஊடக வழிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க வலைத்தளங்கள் மூலம் மட்டுமே சரிபார்க்கவும்.
சந்தேகத்திற்குரிய செய்திகள், மோசடி வலைத்தளங்கள், தவறான சமூக ஊடகப் பதிவுகள் குறித்து தகுந்த அதிகாரிகளுக்கு தாமதமின்றி உடனடியாகத் தெரிவிக்கவும்.
இணையப் பாதுகாப்பு ஆபத்துகளைக் குறைக்க உங்கள் மொபைல் சாதனங்கள், இயங்குதளங்கள் (Operating Systems) மற்றும் மென்பொருள் செயலிகளை தவறாமல் புதுப்பித்து (Update) வைத்திருக்கவும்.
அவசர உணர்வை ஏற்படுத்தும், சட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக அச்சுறுத்தும் அல்லது உடனடியாகப் பணம் செலுத்துமாறு கோரும் செய்திகளைப் பெறும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது, இணையக் குற்றங்களால் பாதிக்கப்படும் அபாயத்தைக் கணிசமாகக் குறைப்பதுடன், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதிப் பாதுகாப்பையும் உறுதிசெய்ய உதவும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் முன்னரும் ஒருமுறை பொதுமக்களுக்கான ஆலோசனைக் குறிப்பு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










