சிறைச்சாலைகளில் திட்டமிட்டு மோதல் நிலையை ஏற்படுத்திவிட்டு, நாட்டில் மீண்டும் அவசரகால சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முற்படுகிறதா ? இந்தச் சிறைச்சாலை மோதல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் சூழ்ச்சி இருக்குமோ என்ற சந்தேகமும் எழுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
“பாதாளக் குழுக்களை ஒடுக்குவோம் எனச் சூளுரைத்துவிட்டு ஆட்சிக்கு வந்தவர்களால், இன்று சிறைக்குள் இருப்பவர்களைக் கூட நிர்வகிக்க முடியாத நிலைமையே காணப்படுகிறது.
சிறைச்சாலைகளில் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சூழலில், திடீரென எவ்வாறு இவ்வளவு பெரிய பிரச்சினைகள் ஏற்பட முடியும்? இது அரசாங்கத்தின் சூழ்ச்சியா என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகிறது.
ஒருவேளை, நாட்டில் மீண்டும் அவசரகால சட்டத்தைக் கொண்டுவருவதற்காகவே இவ்வாறு செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.
நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்திடம் சரியான தீர்வுகள் இல்லை என்பதையே இத்தகைய சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. ஒரு சிறைச்சாலையைக் கூட முறையாக நிர்வகிக்க முடியாதவர்கள் எவ்வாறு நாட்டை ஆள்வார்கள்?”– என ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.
