அரசமைப்பின் உத்தேச 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சமூகத்தில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். எவ்வாறு இருப்பினும், இந்த அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் உள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலம் எவ்வாறு எதிரணியை ஒடுக்கும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெளிவுபடுத்தினால், அதற்குரிய பதிலை வழங்க முடியும். அவ்வாறு இல்லாமல் வேண்டுமென்றே விமர்சிப்பது ஏற்புடையது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், “இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் ஒரு சுயாதீன அமைப்பாகும். 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அச்சங்கத்தினரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இதனை எமக்கு எதிரான நடவடிக்கையாக நாம் பார்க்கப்போவதில்லை. இவ்வாறு சமூகத்தில் சட்டமூலம் தொடர்பில் கருத்தாடல் ஏற்படுவது நல்லதொரு ஜனநாயகப் பண்பாகும்” என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது எவ்வாறு எதிரணிக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக அமையும் என்றும் நீதி அமைச்சர் கேள்வி எழுப்பினார்.










