லொத்தர் இலக்கங்களில் சூதாட்டம்: இலட்சங்களை விழுங்கும் புதிய மோசடி!

தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையின் சீட்டிழுப்பு இலக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் சட்டவிரோத சூதாட்டம் காரணமாக சமூகத்தில் பாரிய அழிவு நிலை உருவாகியுள்ளதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் சிரில் அன்டனி பெரேரா தெரிவித்துள்ளார்.

COPE துணைக்குழுவின் முன்னிலையில் இரு லொத்தர் சபைகளின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தபோது அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.

இந்த மிகவும் அழிவுகரமான நிலைமை, போதைப்பொருள் பாவனைக்கு அடுத்தபடியாக சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானது என்றும் அவர் கூறினார்.

நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கிராமப்புறங்களில் 100 ரூபாய் போன்ற சிறிய தொகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘கொட்டு வெட்டுதல்’ எனப்படும் சூதாட்டம் தற்போது பாரிய சமூகப் பிரச்சினையாக வளர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிக வருமானம் உள்ள சில பகுதிகளில் ஒரு ‘கொட்டு’க்கான பந்தயத் தொகை ஒரு இலட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

0 முதல் 9 வரையான இலக்கங்களில் இரண்டு இலக்கங்களைத் தெரிவுசெய்து, அன்றைய தினம் வெளியிடப்படும் லொத்தரியின் கடைசி இரண்டு இலக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இதில் பந்தயம் கட்டப்படுகிறது.

தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் சீட்டிழுப்புகள் இரவு 7.30 மணியளவிலேயே நடத்தப்படுகின்றன. எனினும், ஒரு மாதத்திற்குத் தேவையான அனைத்து சீட்டிழுப்புகளும் ஒரே நேரத்தில் முன்கூட்டியே நடத்தப்பட்டு, பின்னர் தினந்தோறும் முடிவுகள் வெளியிடப்படுகின்றன என்ற பொய்யான தகவலை மக்களிடையே பரப்பி, WhatsApp குழுக்கள் ஊடாக திட்டமிட்ட முறையில் இந்தப் பண மோசடி நடத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு பிரதேசத்திலும் நடைபெறும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்ப பந்தயத் தொகையும் மாறுபடுகிறது. மன்னம்பிட்டிய போன்ற நெல் அறுவடை நடைபெறும் பகுதிகளில் ஒரு ‘கொட்டு’க்கு 30,000 ரூபாய் வரையும், இரத்தினபுரி போன்ற இரத்தினக்கல் தொழிலுடன் தொடர்புடைய பகுதிகளில் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாகவும் பந்தயம் கட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பலர் தங்களது காணிகள் மற்றும் சொத்துக்களை இழந்து நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கணவர்கள் இந்த சூதாட்டத்திற்கு அடிமையாகியதால் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைப்பதாக சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி தொடர்பாக பொலிஸ்மா அதிபர், அரச புலனாய்வு சேவை மற்றும் மத்திய ஊழல் குற்ற விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கும் ஏற்கனவே முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய லொத்தர் சட்டத்தின் கீழ், சட்டபூர்வமான லொத்தர் சீட்டிழுப்புகள் தொடர்பில் மட்டுமே அந்த நிறுவனத்தால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். எனவே நிதி அமைச்சின் நேரடி ஒத்துழைப்பு இல்லாமல் இந்த சட்டவிரோத சூதாட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது கடினம் என தலைவர் மேலும் வலியுறுத்தினார்.

இந்த சட்டவிரோத சூதாட்டம் தொடர்ந்து பரவுமானால், லொத்தர் சபைகளின் வர்த்தக நிலைத்தன்மை மட்டுமன்றி சாதாரண மக்களின் வாழ்க்கையும் முழுமையாக அழிவுக்குள்ளாகும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.

Related Articles

Latest Articles