லுணுகலை பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் மாணவன் கைது

கஞ்சா போதைப்பொருளை தன்னிடம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 16 வயது பாடசாலை மாணவரொருவரை, லுணுகலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

லுணுகலை பகுதியைச் சேர்ந்த மாணவரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து இறங்கி, லுணுகலை பாக்குத் தோட்டம் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவரை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது மாணவனிடமிருந்து 5,600 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட மாணவனின் தந்தை கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவனிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர், அவரை இன்று (13) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

த. டிமேஷன்

Related Articles

Latest Articles