இலங்கையில் பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களிடையே குடல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை, குடல், கல்லீரல் நோய்களுக்கான ஆலோசனை நிபுணர் மருத்துவர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த மருத்துவர் குலதுங்க, இளைஞர்கள் மத்தியில் பதப்படுத்தப்பட்ட மற்றும் செயற்கை உணவுகளை விரும்பி உட்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளமை இந்த நிலைமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.
மூளைக்கும் குடலுக்கும் இடையே சிக்கலான தொடர்பு ஒன்று இருப்பதாகவும், அது ‘குடல்–மூளை அச்சு’ (Gut-Brain Axis) என அழைக்கப்படுவதாகவும் அவர் விளக்கினார். இதன் மூலம் மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்றவை செரிமான அமைப்பை பாதிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மருத்துவர் குலதுங்கவின் கூற்றுப்படி, உளவியல் ரீதியான மன அழுத்தம், மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் ஆகியவை ஒன்றிணைந்து Irritable Bowel Syndrome (IBS) எனப்படும் எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி ஏற்படுவதற்கு காரணமாக அமையக்கூடும்.
உணவுப் பழக்கங்கள் மாறிவருவதால் IBS பாதிப்பு தற்போது அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, பல இளைஞர்கள் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், தானியங்கள் போன்ற இயற்கை உணவுகளிலிருந்து விலகி, எளிதில் கிடைக்கக்கூடிய பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகளவில் உட்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என மருத்துவர் குலதுங்க வலியுறுத்தியுள்ளார். இயற்கை உணவுகளிலிருந்து விலகிச் செல்லும் தற்போதைய உணவுப் பழக்கம், இளைஞர்களிடையே குடல் தொடர்பான நோய்கள் அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

