துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் பயணித்த ‘பிளைதுபாய்’ (FlyDubai) பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்த இஸ்ரேல் தயாராக இருந்ததாக சி.பி.எஸ் நியூஸ் (CBS News) செய்தி வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 11 தாக்குதல் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக இஸ்ரேலிடம் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள அவசரகாலத் திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டிற்குள் நுழையும் கட்டுப்பாட்டை இழந்த அல்லது அச்சுறுத்தலாகக் கருதப்படும் பயணிகள் விமானம் நாட்டின் முக்கிய இலக்குகளைத் தாக்குவதைத் தடுப்பதற்காகச் சுட்டு வீழ்த்தப்படலாம். இத்தகைய முடிவை எடுக்கும் இறுதி அதிகாரம் அந்நாட்டின் பிரதமருக்கு மட்டுமே உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விமானம் கடத்தப்பட்டதா என்பதை அறிய இஸ்ரேல் வான்படையின் போர் விமானிகள் முயன்றபோதிலும், அதற்குள் அவ்விமானம் சவுதி அரேபிய எல்லைக்குள் பிரவேசித்துள்ளது. இதனையடுத்துத் தங்கள் முயற்சியை கைவிட்டதாக இஸ்ரேல் படையினர் தெரிவித்துள்ளனர்.
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி கடந்த 30ஆம் திகதி காலை 180 பேருடன் ‘பிளைதுபாய்’ விமானம் புறப்பட்டது. இதில் 174 பயணிகளும், 2 பைலட்டுகள் உட்பட 6 ஊழியர்களும் பயணித்தனர்.
இந்திய வம்சாவளி பைலட்டான ஸ்மித் மச்சார் (39) என்பவரே அவ்விமானத்தை இயக்கியதுடன், ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை பைலட் அவருக்கு உதவியாக இருந்துள்ளார்.
பயணத்தின் போது, காக்பிட்டில் (cockpit) இருந்த அவசரகாலக் கோடரியால் இந்தியப் முதன்மை விமானி ஸ்மித் மச்சாரைத் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி திடீரெனத் தாக்கினார். இதில் காயமடைந்த போதிலும் நிலைகுலையாத மச்சார், துணை பைலட்டை தீரத்துடன் எதிர்த்துப் போராடினார்.
சரியான நேரத்தில் காக்பிட் கதவைத் திறந்து, சக ஊழியர்கள் மற்றும் பயணிகளின் துணையுடன் தாக்குதல் நடத்தியவரைக் கட்டுப்படுத்தினார். பின்னர் விமானத்தைச் சவுதி அரேபியாவில் பாதுகாப்பாகத் தரையிறக்கி, 180 பேரின் உயிரையும் அவர் காப்பாற்றினார்.
