FIFA – தலைமைப் பதவிக்கு மும்முனைப் போட்டி

 

FIFA தலைவர் பதவிக்கான 2027 தேர்தலில் தற்போதைய தலைவர் ஜியானி இன்பான்டினி உள்ளிட்ட மூன்று பேர் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) அறிவித்துள்ளது.

இன்பான்டினிக்கு எதிராக பிரான்ஸின் பிலிப் டியாலோ மற்றும் ஜப்பானின் கோசோ தஷிமா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

FIFA கவுன்சில் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து, உறுப்பு நாடுகளின் கால்பந்து சங்கங்கள் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக FIFA தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிலிப் டியாலோவும், ஜப்பான் கால்பந்து சங்கத்தின் கௌரவத் தலைவரான கோசோ தஷிமாவும் இன்ஃபான்டினிக்கு எதிராக களமிறங்குகின்றனர்.

கிடைக்கப்பெற்ற வேட்புமனுக்கள் தேர்தல் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், வேட்பாளர்களின் தகுதிகள் பரிசீலிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்றும் FIFA குறிப்பிட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட மற்றும் தகுதி பெற்ற வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு 2027 பெப்ரவரி 18ஆம் திகதிக்குள் உறுப்பு நாடுகளுக்கு அறிவிக்கப்படும்.

2027 மார்ச் 18ஆம் திகதி மொராக்கோவின் ரபாத் நகரில் நடைபெறவுள்ள FIFAவின் 77ஆவது மாநாட்டில் தலைவர் தேர்தல் இடம்பெறவுள்ளது.

FIFAவின் 211 உறுப்பு நாடுகளும் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைக் கொண்டுள்ளன.

2016 பெப்ரவரி முதல் FIFA தலைவராகப் பதவி வகித்து வரும் ஜியானி இன்ஃபான்டினி, மேலும் நான்கு ஆண்டுகளுக்கு தலைவராகத் தொடரும் நோக்கில் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்தத் தேர்தலில் வெற்றி பெறுபவர் 2031ஆம் ஆண்டு வரை FIFA தலைவராகப் பதவி வகிப்பார்.

Related Articles

Latest Articles