பட்ஜட்டை மக்கள் நிராகரித்துவிட்டனர்: மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மஹிந்த அணி வலியுறுத்து

பட்ஜட்டை மக்கள் நிராகரித்துவிட்டனர்: மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மஹிந்த அணி வலியுறுத்து

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், மக்கள் அதனை ஏற்கனவே நிராகரித்துவிட்டனர்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் இதன் பிரதிபலிப்பைக் காண முடியும் எனவும், தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்குச் சவால் விடுப்பதாகவும் மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜனக வக்கும்புர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் உள்ளது. எனவே, வரவு – செலவுத் திட்டம் தடையின்றி நிறைவேறும்.

ஆளுங்கட்சி கூறுவதைப் போன்று இது சிறந்த வரவு – செலவுத் திட்டமாக இருந்தால், மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றோம்.

அவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டால் மக்கள் உரிய பதிலடியைக் கொடுப்பார்கள். மக்கள் வரவு – செலவுத் திட்டத்தை ஏற்கனவே நிராகரித்துவிட்டனர். எனவே, முடிந்தால் தேர்தலை நடத்திக் காட்டுமாறு மீண்டும் சவால் விடுக்கின்றோம்” என்றார்.

……………….

இம்ரான்கான் குறித்து விவாதிக்க ஏன் அனுமதி மறுப்பு? சஜித் கேள்வி

 

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்பான பிரேரணை மீது நாடாளுமன்ற விவாதத்தை நடத்த இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்தை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய அவர், நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்கள் தொடர்பாக கேள்வி எழுப்புவதற்கு எதிர்க்கட்சிக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து விமர்சித்தார்.

இம்ரான் கான் தொடர்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை சமர்ப்பித்திருந்தார். எனினும், குறித்த விவாதம் இலங்கை – பாகிஸ்தான் இராஜதந்திர உறவுகளை பாதிக்கக்கூடும் என்ற காரணத்தினால் அது நிராகரிக்கப்பட்டதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த விடயம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகரால் முன்வைக்கப்பட்டதாகவும், இருதரப்பு உறவுகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பாக தனது கருத்து கோரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சபாநாயகர் தன்னிடம் கருத்து கோருவதற்கு முன்னரே, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவுடன் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடியிருந்ததாகவும் சஜித் தெரிவித்தார்.

அரசியல் இலாபங்களுக்காக இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கம் தமது கட்சிக்கு இல்லை என வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், அதேவேளை, குறித்த விவாதம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை கேள்வி எழுப்புவதற்குக்கூட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தானில் நீதிமன்ற விசாரணைகளில் நிலுவையில் உள்ள விடயங்கள் தொடர்பாக நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழ் விவாதிக்க முடியாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்திருந்த கருத்தையும் சஜித் பிரேமதாச இதன்போது குறிப்பிட்டார்.

அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் சபாநாயகர் வெவ்வேறு அணுகுமுறைகளைப் பின்பற்றுவதாக குற்றஞ்சாட்டிய அவர், முக்கியமான விடயங்களை முன்வைக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக தடைகள் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான அணுகுமுறை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய சஜித் பிரேமதாச, அரசாங்கத்தின் தீர்மானங்களை கேள்விக்குட்படுத்துவதற்கான எதிர்க்கட்சியின் உரிமையை நாடாளுமன்றம் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

………..

ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட 21 விசேட அலகுகளின் செலவுத் தலைப்புகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

 

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் முதல் நாளான இன்று (21) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கௌரவ ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட 21 விசேட செலவின அலகுகளின் செலவுத் தலைப்புகள், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி திருத்தங்களின்றி நிறைவேற்றப்பட்டன.

அதற்கமைய கௌரவ ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், அமைச்சரவை அலுவலகம், அரசாங்க சேவை ஆணைக்குழு அலுவலகம், நீதிச் சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நிருவாக மேன்முறையீட்டு நியாயச்சபை, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பாராளுமன்றம், பாராளுமன்ற சபை முதல்வரின் அலுவலகம், பாராளுமன்ற அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசானின் அலுவலகம், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம், தேர்தல்கள் ஆணைக்குழு, தேசிய கணக்காய்வு அலுவலகம், நிருவாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம், கணக்காய்வு சேவை ஆணைக்குழு, தேசிய பெறுகை ஆணைக்குழு மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழு ஆகிய விசேட செலவின அலகுகளுக்குரிய செலவுத் தலைப்புகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

…………

இடைநடுவில் கைவிடப்பட்ட 72 கல்வி அபிவிருத்தித் திட்டங்கள்; 1,664 மில்லியன் ரூபா செலவு

2018–2021 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட 72 கல்வி அபிவிருத்தித் திட்டங்களுக்காக 1,664 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (COPA) தெரியவந்துள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 2021–2023 நிதியாண்டுகளுக்கான மூவாண்டு அறிக்கைகள், 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அமைச்சின் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தலைமையில் அண்மையில் (19) நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.

கைவிடப்பட்ட 72 திட்டங்களில் 35 திட்டங்கள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், 13 திட்டங்களின் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், நான்கு திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், ஒப்பந்தப் பிரச்சினைகள் காரணமாக 20 திட்டங்களின் பணிகள் முடங்கியுள்ளன. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2019ஆம் ஆண்டு ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் மூன்று தேசிய பாடசாலைகளை நிறுவும் திட்டத்திற்காக சுமார் 1,600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், கொள்கை ரீதியான தீர்மானத்தால் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளமை தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன், தொழில்நுட்ப விவரக்குறிப்புகளுக்கு அமையாத கணினித் தொகுதி ஒன்று கொள்வனவு செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டமை, அதுதொடர்பாக நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை மற்றும் தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் கட்டமைப்பின் (NEMIS) முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மூலதன ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துவதில் ஏற்படும் தாமதங்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை, கொள்வனவு நடைமுறைகளில் உள்ள சிக்கல்கள் மற்றும் கணக்காய்வு வினாக்களுக்குப் பதிலளிப்பதில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பிலும் ஆராய்ந்த குழு, அவற்றை விரைவாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.

…………

மக்களின் உரிமைகளை பாதுகாத்தே புதிய சட்டங்கள் வரும்: அரசு உறுதி

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள், கருத்துச் சுதந்திரம் என்பவற்றுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே புதிய சட்டங்கள் இயற்றப்படும். பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் சட்டத்துக்கு முரணான வகையில் பயன்படுத்தப்படமாட்டாது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியதாவது:

“ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இவ்வருடத்துடன் முடிவடையவிருந்தது. எனினும், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டு வரை அந்தச் சலுகை எமக்குக் கிடைக்கும்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என கடந்த காலங்களில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது. நாமும் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்திருந்தோம். ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மட்டும் கருத்திற்கொள்ளாது, நாட்டு மக்களின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு அச்சட்டத்தை இரத்து செய்வதற்கான முடிவை எடுத்தோம்.

எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர், தேசிய பாதுகாப்பு தொடர்பில் வலுவான சட்டத்திட்டம் அவசியம் எனப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இதனையும் உள்ளடக்கிய அனைத்து காரணிகளையும் கருத்திற்கொண்டே பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் காணப்பட்ட விடயங்கள் புதிய சட்டமூலத்தில் இல்லை.

நீதிமன்ற உத்தரவுக்கமைய திருத்தங்களை மேற்கொள்ளவும் நாம் தயாராக உள்ளோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அடக்குமுறைச் சட்டமூலங்கள் கொண்டுவரப்படமாட்டாது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு புதிதாக ஐந்து நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. போதைப்பொருள் ஒழிப்பு, குற்றக்குழுக்களை ஒழித்தல் என்பன அவற்றில் அடங்கும். இதற்கமையவே திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

மக்களின் ஜனநாயக உரிமைகள், கருத்துச் சுதந்திரம் என்பவற்றைப் பாதிக்காத வகையிலும், ஐ.நா. சாசனங்களுக்கு அமைவாகவுமே சட்டமூலங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

…………..

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக ஆசிரியர்கள், அதிபர்கள் போராட்டம்; நவம்பர் 30 நாடளாவிய பணிப்புறக்கணிப்பு

2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நீண்டகால சம்பளப் பிரச்சினைகள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கப்படாமைக்கு எதிராக, நவம்பர் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

கொழும்பில் நடைபெற்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நவம்பர் 30ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைகள் உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளுக்குத் தீர்வு முன்வைக்கப்படவில்லை என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சம்பளத் திருத்தங்கள் கூட ஊதியத்தின் உண்மையான பெறுமதியைப் பாதுகாக்கவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தப் பணிப்புறக்கணிப்பினால் நாடளாவிய பாடசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் டிசம்பர் 1ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் நவம்பர் 30ஆம் திகதி பணிப்புறக்கணிப்புக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

வரவு செலவுத் திட்டத்தின் எஞ்சிய கட்டங்களிலாவது தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள தொழிற்சங்கங்கள், கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கான அழுத்தமாகவே இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளன.

……….

பலாங்கொடையில் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

இரத்தினபுரி – பலாங்கொடை, பாங்கியாவத்தை பகுதியில் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில், அதன் இடிபாடுகளுக்குள் சிக்குண்ட 7 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டின் முன்பாகத் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மதில் சுவருக்கு அருகில் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் குறித்த சிறுவன் நின்றுகொண்டிருந்த போது, அம்மதில் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.

அதற்குள் அச்சிறுவன் சிக்குண்டு இருப்பதை சிறுவனின் தாயார் அவதானித்து, அயலவர்களின் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக முச்சக்கரவண்டியொன்றின் மூலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலம் மீதான பிரேத பரிசோதனை நாளை நடைபெறவுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

…………

 

Related Articles

Latest Articles