22 இற்கு எதிராக சட்டச் சமர்: அடுத்த வாரம் உயர்நீதிமன்றில் வழக்கு!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக, அடுத்த வாரம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் முன்னாள் நீதி அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

” 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தேவையில்லை என இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தினரும் தெரிவித்திருந்தனர். இது தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைப்பதற்காகவே ஜனாதிபதியிடம் சந்திப்பிற்கான நேரத்தைக் கோரியிருந்தனர். ஆனால், சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டு முடிவெடுத்த பின்னர் அவர்களைச் சந்திப்பதில் என்ன பயன் இருக்கப் போகிறது? இது வெறும் கண்துடைப்பு நாடகமேயாகும்.

எனவே, நாம் அடுத்த வாரம் உயர்நீதிமன்றத்தை நாடுவோம். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நீதித்துறைக்கு எவ்வித நிவாரணத்தையும் அளிக்காது என்றும், வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தாது என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டுவோம். ஏனெனில், மொத்த வழக்குகளில் ஒரு சதவீதமானவை மட்டுமே உயர்நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன.

அரசாங்கத் துறையின் ஏனைய பிரிவினரும் இதேபோன்று ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்குமாறு கோரினால், அது மேலும் புதிய பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும்” என்று பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles