அவிசாவளை பெண்ட்ரிக் தோட்ட ஆலயத்தில் 10 வருடமாக பெரும்பான்மை இனத்தவரின் ஆதிக்கம் : செந்தில் தொண்டமானின் அதிரடியால் தோட்ட மக்களுக்கு தீர்வு!
அவிசாவளை பெண்ட்ரிக் தோட்ட ஆலயத்தில் கடந்த 10 வருடகாலமாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரின் ஆதிக்க காணப்பட்டுவந்த விவகாரம் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து அந்த பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுத்துள்ளார்.
அவிசாவளை பெண்ட்ரிக் தோட்ட ஆலயம் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் புனரமைப்புப் பணிகளுக்காக உடைக்கப்பட்டுள்ளது. என்றாலும் ஆலயத்தின் நிர்வாகச் சபைத் தலைவராக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் இருந்தமையால் இந்த ஆலயத்தை கடந்த 10 வருடங்களாக புனரமைக்க முடியாது போயுள்ளது. ஆலயத்தில் தோட்ட மக்களால் வழிபாடுகளில்கூட ஈடுபட முடியாத வகையில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர் இடர்களை ஏற்படுத்தி வந்துள்ளார்.
பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் பெண்ட்ரிக் தோட்டம் அமைந்துள்ளமையால் இந்த மக்கள் பொறுமைக்காத்து வந்துள்ளனர். என்றாலும் ஆலய புனரமைப்புக்காக வழங்கப்படும் நிதியை தலைவராகவுள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் தமது தேவைக்காக தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்துள்ளதால் மக்கள் பொறுமையை இழந்ததுடன், விவகாரத்தை தோட்ட மக்கள் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
நேரடியாக விடயத்தில் தலையிட்டு ஆலய நிர்வாகத்தை தோட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் ஆலயத்தை புனரமைப்பதற்கான நிதியை பெற்றுக்கொடுக்கவும் செந்தில் தொண்டமான் நடவடிக்கையெடுத்துள்ளார்.
இதற்கான உத்தரக் கடிதம் சீதாவக்க பிரதேச சபைக்கும் பிரதேச செயலாளருக்கும் இந்துச் சமய கலாசார அலுவலகங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரனால் அனுப்பப்பட்டுள்ளது.