18 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் 22 வயது இளைஞன் கைது

பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெந்தேசிவத்த, மஸ்வில பகுதியில் ஐஸ் எனப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (18) ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்தில் உள்ள விசேட நடவடிக்கை பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 18 கிலோ 672 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 12 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின்போது, பாணந்துறை ‘குடு சலிந்து’வின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவரும், தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படும் ‘டுபாய் ரவிஷ்க’ என்பவரின் இலங்கைக்கான பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவராகவும் சந்தேகநபர் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் முன்னெடுத்து வருகிறது.
………..

Related Articles

Latest Articles