தலவாக்கலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வாகன பரிசோதனையின்போது, போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்பட்ட 28 வாகனங்கள் தற்காலிகமாக சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.
பேருந்துகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வேன்கள், லொறிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 40 வாகனங்கள் இதன்போது பரிசோதிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா பொலிஸ் பிரிவின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளும் மோட்டார் வாகன பரிசோதகர்களும் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
பரிசோதனை செய்யப்பட்ட வாகனங்களில் 28 வாகனங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவை தற்காலிகமாக சேவையில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனங்களின் வருமான அனுமதிப்பத்திரங்களும் அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
சேவையில் இருந்து நீக்கப்பட்ட வாகனங்களில் 4 தனியார் பேருந்துகளும் 15 முச்சக்கர வண்டிகளும் அடங்குகின்றன.
குறித்த வாகனங்களில் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள் முழுமையாக சரிசெய்யப்பட்டு, மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் வரை அவற்றை சேவையில் ஈடுபடுத்த அனுமதிக்கப்படமாட்டாது என ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துகளை குறைக்கும் நோக்கில் இந்த திடீர் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதேபோன்ற வாகன பரிசோதனைகள் நுவரெலியா மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.










