செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது சாரதிகளும் பயணிகளும் சீட் பெல்ட் அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சீட் பெல்ட் பொருத்தப்படாமல் தயாரிக்கப்பட்ட பழைய வாகனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக் காலம் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

அதன் பின்னர், அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களிலும் சீட் பெல்ட் பொருத்தப்பட்டிருப்பது கட்டாயமாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், வாகனங்களில் பயணிக்கும் அனைத்து சாரதிகளும் பயணிகளும் சீட் பெல்ட் அணிந்திருப்பது கட்டாயமாகும்.

இந்த விதிமுறை கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் நபர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பேருந்துகளில் சீட் பெல்ட் அணியாத பயணிகளிடமிருந்தும் குறித்த அபராதத்தை அறவிடுவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

சீட் பெல்ட் இல்லாத வாகனங்களுக்கு அவற்றை பொருத்திக்கொள்வதற்காக வழங்கப்பட்ட சலுகைக் காலம் செப்டம்பர் 19ஆம் திகதியுடன் நிறைவடையும் என தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுல குலத்னே தெரிவித்துள்ளார்.

2025 செப்டம்பர் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட 2455/29 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்துகளில் சீட் பெல்ட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles