தமது 4 பெண் குழந்தைகளையும் கண்மூடித்தனமாக தாக்கினார் எனக் கூறப்படும் தாய் ஒருவரை மடூல்சீமை பொலிஸார் , கைது செய்துள்ளனர்.
எல்டப் டைனாவத்தை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய தாயே இவ்வாறு சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட 15, 11, 09 மற்றும் 04 வயதுடைய நான்கு பெண் பிள்ளைகளும், தாய் தங்களை கைகளாலும், கற்களாலும், கம்புகளாலும் தொடர்ச்சியாகத் தாக்கி வருவதாகத் தெரிவித்து, நேற்றைய தினம் பசறை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறையிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்துச் சிறுவர்களிடம் கேட்டறிந்த பசறை பொலிஸார், குறித்த பகுதி மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டது என்பதால் உடனடியாக மடூல்சீமை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பசறை பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற மடூல்சீமை பொலிஸார், நான்கு சிறுமிகளையும் பொறுப்பேற்றதுடன் தாயையும் கைது செய்தனர்.
இச்சிறுமிகளின் தந்தை கொழும்பில் பணிபுரிந்து வரும் நிலையில், தாய் சிறுமிகளை கொடூரமாகத் தாக்கி வந்தது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தற்போது மடூல்சீமை மெட்டிக்காத்தன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிகள் நால்வரும், மேலதிக சிகிச்சை மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காகப் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தாய் பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
த.டிமேஷன்










