பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய மயக்க மருந்தியல் நிபுணர் வைத்தியர் பிரபாத் தயாரத்னவின் சடலம், இன்று (24) காலை மஹியங்கனை – 17ஆம் கட்டை, மாபாகடவெவ பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் பாறை ஒன்றின் மீது இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் பிரபாத் தயாரத்ன, நேற்று (23) காலை வழக்கம்போல் வைத்தியசாலையில் தனது கடமைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், அதன் பின்னர் மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார்.
இதையடுத்து, பதுளை தலைமையக பொலிஸார் உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்கள் இணைந்து தேடுதல் மற்றும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தன.
வைத்தியர் பயணித்த கார் மஹியங்கனை நோக்கிச் செல்வது மீகஹகிவுல பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராவில் தெளிவாக பதிவாகியிருந்ததை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் போது, பதுளை – மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாபாகடவெவ பகுதியில் வைத்தியரின் கார் நேற்று இரவு மஹியங்கனை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், வைத்தியரைத் தேடும் நடவடிக்கை இன்று (24) காலை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டதுடன், தேடுதல் நடவடிக்கைகளுக்கு இராணுவத்தின் உதவியும் பெறப்பட்டது.
இதன்போது, வனப்பகுதிக்குள் அமைந்திருந்த பாறை ஒன்றின் மீது வைத்தியரின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, நீதவான் விசாரணை மற்றும் சம்பவ இடப் பரிசோதனை நடத்தப்படவுள்ளதுடன், சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஊவா மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹேஷ் சேனாரத்ன, பதுளை மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லக்சிறி விஜேசேன மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (1) வேஹித தேசப்பிரிய ஆகியோரின் ஆலோசனையின் பேரில், மஹியங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சிசிர ஹேரத் தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
த. டிமேஷன்










