திருவிழாக்களில் அதீத ஒளி, வானவேடிக்கைகளின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த புதிய சட்ட ஏற்பாடுகள்

திருவிழாக்கள், ஆலய உற்சவங்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், அதிக சத்தத்தை ஏற்படுத்தக்கூடிய வானவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதால் பொதுமக்களின் பாதுகாப்புக்கும், சுகாதாரத்துக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணை விதிகளை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் தேவையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று (25.08.2026) செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

கடந்த 20ஆம் திகதி பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தின் திருவிழாவின்போது பயன்படுத்தப்பட்ட அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள் மற்றும் வானவேடிக்கைகளின் தாக்கத்தினால் 500 இற்கும் அதிகமானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பில் இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

குறித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கான குறுகியகால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் மற்றும் ஆளுநர் கலந்துரையாடினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்கள் மக்களின் மத மற்றும் சமூக வாழ்வின் முக்கியமான அம்சங்களாக காணப்படுகின்ற போதிலும், அவற்றை முன்னெடுக்கும் போது பொதுமக்களின் பாதுகாப்பும் சுகாதாரமும் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

ஒரு திருவிழா அல்லது பொது நிகழ்வின்போது பயன்படுத்தப்படும் மின்விளக்குகள் மற்றும் வானவேடிக்கைகள் பொதுமக்களின் கண்கள், செவிகள் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தால், அவற்றின் பயன்பாடு தொடர்பில் உரிய கட்டுப்பாடுகள் அவசியம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, குறித்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட அதீத ஒளி கொண்ட மின்விளக்குகளைப் பொருத்துவதற்கு உரிய அனுமதி பெறப்பட்டிருந்ததா என்பது தொடர்பில் முழுமையாக ஆராயப்பட வேண்டும் எனத் தெரிவித்த அமைச்சர், இவ்வாறான உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதி நடைமுறைகள் என்ன, அவற்றை யார் வழங்கினர், பாதுகாப்புத் தரநிலைகள் தொடர்பில் ஏதேனும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பன தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த மின்விளக்குகள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன, அவற்றின் பயன்பாட்டுக்கு உரிய சட்டபூர்வ அனுமதிகள் இருந்தனவா என்பது தொடர்பிலும் பொலிஸாருடன் கலந்துரையாடி தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

“இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே எமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். சம்பவம் இடம்பெற்ற பின்னர் நடவடிக்கை எடுப்பதைவிட, எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்கூட்டியே உரிய ஒழுங்குமுறைகளை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்” என அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கும் போது, மின்விளக்குகள், ஒலி அமைப்புகள், வானவேடிக்கைகள் உள்ளிட்டவற்றின் பயன்பாடு தொடர்பில் தெளிவான பாதுகாப்பு நிபந்தனைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதற்காக வடக்கு மாகாணத்தின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் தங்களது அதிகார வரம்பிற்குள் உடனடியாக தேவையான நியமத்துணை விதிகளை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிர்வாக மற்றும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் கண்டு, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் தேவையான புதிய சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு அல்லது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் அதிக ஒளி, அதிக சத்தம் அல்லது ஆபத்தான வானவேடிக்கைகளைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில், தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளின் கீழ் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

பொதுத் தொல்லை தொடர்பான சட்ட ஏற்பாடுகளின் கீழ் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸாருடன் விரைவான கலந்துரையாடலை நடத்துவதற்கும் அமைச்சர் மற்றும் ஆளுநர் இணக்கம் தெரிவித்தனர். இதன் மூலம் சட்டரீதியான நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் இரண்டையும் ஒருங்கிணைத்து முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக விரைந்து செயற்பட்ட வைத்தியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் வைத்திய துறையினரின் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு, எதிர்காலத்தில் தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிடுவது அவசியம் எனவம் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது, பொதுமக்களின் கண் மற்றும் செவிப் பாதுகாப்பு உள்ளிட்ட சுகாதார விடயங்களை கருத்திற்கொண்டு திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் மின்விளக்குகள் மற்றும் வானவேடிக்கைகளுக்கான பாதுகாப்புத் தரநிலைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், ஆலய நிர்வாகங்கள், திருவிழா ஏற்பாட்டுக் குழுக்கள், உள்ளூராட்சி மன்றங்கள், பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினர் ஆகியோர் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு முன்னர் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாட்டாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குதல், அனுமதி நடைமுறைகளை வலுப்படுத்துதல், ஆபத்தான அல்லது அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உபகரணங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மக்களின் மத மற்றும் கலாசார உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, அவர்களின் உயிர் மற்றும் உடல் நலப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர், பொது மருத்துவ நிபுணர், கண்–காது–மூக்கு சத்திரசிகிச்சை நிபுணர், போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பொதுமுகாமையாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles