போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி விற்பனை செய்தமை தொடர்பில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள Lavin’s Vegetable Family Restaurant நிறுவனத்திற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தினால் 950,000/- ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்ட புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, 1000 மில்லிலீற்றர் (1 லீற்றர்) போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 120/- ரூபா அதிகபட்ச சில்லறை விலையை மீறி, அதனை 200/- ரூபாவிற்கு நுகர்வோருக்கு விற்பனை செய்தமை கண்டறியப்பட்டது.
⚖️ இதனையடுத்து குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், 25.08.2026 அன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 950,000/- ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வாறான சுற்றிவளைப்புகள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதுடன், சட்டத்திற்கு இணங்க வர்த்தகம் செய்யும் வியாபாரிகளுக்கு நியாயமான சந்தைச் சூழலை உறுதிப்படுத்துவதற்கும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
💧 நுகர்வோர்களும் அவதானமாக இருங்கள். பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முன்னர் அவற்றின் அச்சிடப்பட்ட விலை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை (MRP) ஆகியவற்றை சரிபார்க்கவும். நீங்கள் செலுத்தும் பணத்திற்கான சரியான பற்றுச்சீட்டு அல்லது ரசீதை பெற்றுக்கொண்டு பாதுகாப்பாக வைத்திருங்கள். முறைப்பாடு அல்லது விசாரணை மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களில் இத்தகைய ஆவணங்கள் முக்கியமான சான்றாக அமையலாம்.
📞 நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி பொருட்கள் விற்பனை செய்யப்படுவது அல்லது வேறு நுகர்வோர் சட்ட மீறல்கள் தொடர்பான தகவல்கள் இருப்பின், அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் துரித அழைப்பு இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவிக்கவும்.










