உலக குறைந்தபட்ச ஊதியப் பட்டியலில் இலங்கைக்கு அதிர்ச்சி நிலை – 130 நாடுகளில் 120வது இடம்!

உலக நாடுகளின் குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசையில், இலங்கை 130 நாடுகளில் 120வது இடத்தைப் பெற்றுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு Visual Capitalist தொகுத்துள்ள தரவுகளின்படி, கொள்வனவு சக்தி சமநிலை (Purchasing Power Parity – PPP) அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் மாதாந்த குறைந்தபட்ச ஊதியம் 200 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் உலகளவில் மிகக் குறைந்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும் நாடுகளில் ஒன்றாக இலங்கை இடம்பெற்றுள்ளது.

மேலும், ஆய்வில் இடம்பெற்ற தெற்காசிய நாடுகளில் இலங்கையே மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. பாகிஸ்தான் 570 அமெரிக்க டொலர்களுடன் 68வது இடத்திலும், நேபாளம் 490 டொலர்களுடன் 78வது இடத்திலும், பங்களாதேஷ் 379 டொலர்களுடன் 89வது இடத்திலும், இந்தியா 233 டொலர்களுடன் 111வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன. இலங்கையின் தொகை 200 டொலர்களாக மட்டுமே பதிவாகியுள்ளது.

உலகளவில் இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அங்கு கொள்வனவு சக்தி சமநிலை அடிப்படையில் மாதாந்த குறைந்தபட்ச ஊதியம் 3,804 அமெரிக்க டொலர்களாக உள்ளது. ஆசிய நாடுகளில் தென் கொரியா 2,362 அமெரிக்க டொலர்களுடன் முன்னிலையில் உள்ளது.

ஜெர்மனி 2,928 டொலர், பிரித்தானியா 2,902 டொலர், நெதர்லாந்து 2,876 டொலர், அவுஸ்திரேலியா 2,819 டொலர், பெல்ஜியம் 2,752 டொலர், ஐஸ்லாந்து 2,730 டொலர், நியூசிலாந்து 2,673 டொலர், பிரான்ஸ் 2,465 டொலர், அயர்லாந்து 2,433 டொலர் என்ற அளவில் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.

இலங்கையை விடவும் கீழ் நிலையில் வெறும் பத்து நாடுகளே இந்தத் தரவரிசையில் இடம்பெற்றுள்ளன. நைஜர், பூட்டான், ஹெய்ட்டி, கினியா, மத்திய ஆபிரிக்கக் குடியரசு, சியரா லியோன், கானா, கிர்கிஸ்தான், கினியா-பிசாவ், காம்பியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு கீழான இடங்களில் பதிவாகியுள்ளன.

Related Articles

Latest Articles