மலையகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் திட்டங்கள், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளன என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு
” மலையக மக்களுக்கான தனி வீடமைப்புத் திட்டம் முதன்முதலில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா அவர்களால் 1980களில் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வசம் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இருந்த காலப்பகுதியில், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக 36,000 தனி வீடுகள் மலையகத்தில் பல மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டது. அதற்கான ஆவணப் பட்டியல் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தில் உள்ளது.
மேலும், 2013, 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நானும் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களும் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்திய அரசாங்கத்திடம் இருந்து முதன்முறையாக 4000 வீடுகளை மலையகத்திற்கு பெற்றுக் கொடுத்தோம்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை நல்லாட்சி அரசாங்கத்திடம் இ.தொ.கா கையளித்த போது, 36000 வீடுகள் கட்டப்பட்டு, புதிதாக ஆரம்பிக்கவிருந்த மலையக மக்களுக்கான 4000 இந்திய வீட்டுத்திட்டத்துடன் கையளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நல்லாட்சி அரசாங்கத்தால் அந்த காலப்பகுதியில் மலையக மக்களுக்கான வேலைத்திட்டங்களை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கமும் மலையக மக்களின் நலனை கருத்திற்கொண்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக்கொடுத்தமை போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. எனவே, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தத்தமது காலப்பகுதிக்கு ஏற்ப பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளன என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும் “பூனாகலை – கபரகலை பகுதிக்கு ஜனாதிபதி நேரடியாகச் சென்று, அங்கு நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகளை மக்களிடம் கையளித்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். ஜனாதிபதி பல வேலைப்பளுவுக்கு மத்தியில் நேரடியாக சென்று கையளித்தமை மலையக மக்களுக்கு ஜனாதிபதி வழங்கும் முக்கியத்துவத்தை, அங்கீகாரத்தையும் வெளிப்படுத்துகிறது எனவும், மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள வீடுகள் சிறப்பான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதெனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
