நேபாள வெள்ளம்: 21 தமிழர்கள் பாதுகாப்பாக திரும்பினர்: இந்திய நிதியில் கரையொதுங்கிய ஏழு சடலங்கள்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கிய நிலையில், அந்நாட்டு ராணுவத்தால் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக நேற்று டெல்லி வந்தடைந்தனர். அவர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேரும், தங்களுக்கு நேர்ந்த நெருக்கடி குறித்து அமைச்சர் ஜெய்சங்கரிடம் விவரித்தனர்.

வெள்ளப் பெருக்கு அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் இருந்த தாங்கள் உடனடியாக அருகில் இருந்த சிறிய மலை ஒன்றின் மீது ஏறியதாலேயே தப்பியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உடன் இருந்தார். பின்னர் இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

“நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிலிருந்து மீட்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 யாத்ரீகர்கள் அடங்கிய குழுவை வரவேற்றேன். அவர்களின் அனுபவங்களை நேரில் கேட்டறிந்தபோது நெகிழ்ச்சியடைந்தேன்.

இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்ட நேபாள ராணுவம் மற்றும் அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்தியா திரும்புவதை சுமுகமாக ஒருங்கிணைத்த நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பணிகளைப் பாராட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

நேபாள வெள்ளம்: உத்தரப் பிரதேச நதிக் கரையில் ஒதுங்கிய 7 சடலங்கள் மீட்பு

அதேவேளை,நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், உத்தரப் பிரதேசத்தின் நாராயணி நதியில் ஏழு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. மீட்கப்பட்ட உடல்களின் அடையாளங்கள் கண்டுபிடிக்க முடியாமல் அம்மாநில போலீஸார் திணறி வருகின்றனர்.

உ.பி.யின் நேபாள எல்லையில் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்கள் அமைந்துள்ளன. இங்கு கங்கையின் கிளையான நாராயணி நதி ஓடுகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக நாராயணி நதியில் குப்பைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை மட்டுமல்லாமல், சடலங்களும் அடித்து வரப்பட்டன.

இந்த நிலையில், நேற்று இரவு ஏழு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. சடலங்களைக் கண்ட உ.பி வாசிகள் மிகுந்த துயரத்துக்கும் அச்சத்துக்கும் ஆளாகியுள்ளனர்.

டெல்பால் பகுதியில் உள்ள பேதிஹாரி அருகே உள்ள நாராயணி நதி தடுப்புச் சுவர் அருகே எல்லைப் பாதுகாப்புப் படை (எஸ்எஸ்பி) மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழு (எஸ்டிஆர்எப்), இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூன்று சடலங்களை மீட்டுள்ளனர். அருகிலுள்ள டெல்ஃபால் பகுதியில் மேலும் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

குஷி நகரின் கடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிஸ்வா கோபால் கிராமத்துக்கு அருகில், சிடவுனி கரைப் பகுதியில் சிறிது இடைவெளியில் அடையாளம் தெரியாத மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன்மூலம் மீட்கப்பட்ட சடலங்களின் மொத்த எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது.

இந்தச் சடலங்கள் யாருடையவை என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மீட்கப்பட்ட சடலங்கள் பேதிஹாரியில் உள்ள தடுப்பு சுவர்களில் அருகே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் இந்தியர்களா, நேபாளிகளா எனக் கண்டறிய முடியாத நிலையில் உடல்கள் உள்ளன. எனவே, அவை தொடர்பான புகைப்படங்களை நேபாள அரசுக்கும், இந்தியாவின் மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் ரசுவா பகுதியில் உள்ள போட்டேகோஷி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் அளவில் உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, எல்லையோரம் வசிக்கும் உ.பி பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், வெள்ள நீரில் சடலங்கள் மற்றும் பிற பொருட்கள் அடித்து வரப்படுவதால், கண்காணிப்பை அதிகரிக்கவும், வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் உ.பி அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Related Articles

Latest Articles