வாட்ஸ்அப் வலையமைப்பை பயன்படுத்தி , பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரை, ஹெரோயின் 20 கிராம் 175 மில்லிகிராமுடன் 2ஆம் திகதி பண்டாரவளை, தோவ பிரதேசத்தில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், 26 வயதுடைய பதுளை ஹிந்தகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
எல்ல, வெல்லவாய, மெதகம, பிபில மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லொக்கேஷன் முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாக பண்டாரவளை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பண்டாரவளை–பதுளை பிரதான வீதியில் தோவ பாடசாலைக்கு அருகில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அவரது வசமிருந்த சுமார் 40 ஹெரோயின் பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளதாகவும்
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, மகியங்கனை, பிபில மற்றும் மெதகம ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் பொதிகளை லொக்கேஷன் இடங்களில் வைத்து விநியோகித்ததுடன், எல்ல மற்றும் பண்டாரவளை பகுதிகளில் வைப்பதற்காகவே இந்த ஹெரோயின் பொதிகளை கொண்டு வந்ததாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தக தெரிவிக்கப்படுகிறது
ஊவ மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன, பதுளை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லக்சிறி விஜேசேன மற்றும் பண்டாரவளை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மயூர பெரேரா ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய, பண்டாரவளை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அசோக ஹேரத் தலைமையிலான குழுவினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
த.டிமேஷன்










