காலாவதியான தேயிலைப் பொதியொன்றை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்த நிறுவனமொன்றுக்கு கொழும்பு இலக்கம் 5 நீதவான் நீதிமன்றம் ரூ.200,000 அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த நிறுவனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது.
நுகர்வோர் விவகார அதிகார சபை மேற்கொண்ட விசாரணையில், 2026 ஜூலை 15ஆம் திகதியுடன் காலாவதியானதாக குறிப்பிடப்பட்டிருந்த 400 கிராம் தேயிலைப் பொதி, ரூ.1,000க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, 2014 ஓகஸ்ட் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் உள்ள 52ஆம் இலக்க பணிப்புரையை மீறியதாக நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
காலாவதியான, விற்பனைக்குத் தகுதியற்ற அல்லது மனித பாவனைக்கு பொருத்தமற்ற பொருட்களை, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்களுடன் சேர்த்து சேமித்து வைப்பதையோ காட்சிப்படுத்துவதையோ இந்த விதிமுறை தடை செய்கிறது.
