பாண் நிறையிலும் பகல் கொள்ளை: 54 பேக்கரிகள் சிக்கின

இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) மேற்கொண்ட விசேட நாடளாவிய சோதனை நடவடிக்கையில், 54 வர்த்தக நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட நிறையைவிட குறைவான நிறையில் பாண் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1 முதல் 3ஆம் திகதி வரை, சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் உட்பட மொத்தம் 118 நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

முதற்கட்ட விசாரணைகளின்படி, பாணின் நிறை தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 54 இடங்களில் குறைந்த நிறைகொண்ட பாண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், 76 கடைகள் மற்றும் பேக்கரிகளில் பாணின் நிறை முறையாக காட்சிப்படுத்தப்படவில்லை என்பதுடன், 65 இடங்களில் அதன் விலையும் சரியாக காட்சிப்படுத்தப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறைந்த நிறையுடைய பாணை உற்பத்தி செய்த அல்லது விநியோகித்த பேக்கரிகளை கண்டறிவதற்காக சோதனைகள் விநியோகச் சங்கிலி வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதன்படி மேலும் 81 பேக்கரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

குறைந்த நிறையுடன் பாண் தயாரிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்ட பேக்கரி உரிமையாளர்களுக்கு, உற்பத்தி முறைகளை உடனடியாக திருத்தி, சந்தைக்கு விடப்படும் பாண் நிர்ணயிக்கப்பட்ட நிறையைக் கொண்டிருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள விதிகளின்படி,
முழு பாண் – 450 கிராம்
அரை பாண் – 225 கிராம்
நிறையுடன் இருக்க வேண்டும்.

பாணின் நிறை, விலை அல்லது ஏனைய நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான முறைப்பாடுகளை, அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகார சபையின் தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்கலாம். நாடளாவிய சோதனைகள் தொடரும் என்றும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles