“ கடந்தகால அரசாங்கங்களில் அமைச்சர்களாக இருந்த மலையக பிரதிநிதிகள், மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.” என்று தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. கலைச்செல்வி குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜீவன் தொண்டமான் எம்.பி. தொடர்ச்சியாக மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தார். அவர் மாத்திரம் அல்ல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஈராண்டுகளுக்குள் எவ்வளவு செய்துள்ளது என்பதை மலையக மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். சம்பளம் பிரச்சினை, காணி மற்றும் வீட்டு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவருகின்றன.
மலையக மக்களுக்கு வளமான நாட்டில் அழகான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை எமது அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இன்று பேசும் இவர்கள், கடந்த கால ஆட்சிகளில் தொடர்ச்சியாக அமைச்சர்களாக இருந்தவர்கள். இவர்கள் அனைவரும் மலையக மக்களின் பிரச்சினைகளை சரிவர சுட்டிக்காட்டி, தீர்வுகளை வழங்கி இருந்தால் மலையக மக்களின் பிரச்சினை பற்றி பேச நாம் மலையகத்தில் கால் பதித்திருக்க வேண்டிய தேவை எழுந்திருக்காது.” என்றார்.
அதேவேளை, இரண்டு வருடங்களாக எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன எனக் கேட்கும் நீங்கள், 76 வருடகாலமாக பரம்பரை பரம்பரையாக அரசியல் செய்த நீங்கள் மலையக மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்கவும் என ஜீவன் தொண்டமானிடம் கேள்வி எழுப்பினார்.










