உலகளாவிய முக்கியக் கப்பல் பாதையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாப் அல்-மந்தெப் (Bab el-Mandeb) நீரிணையில் அமைந்துள்ள முக்கியப் பூகோள மூலோபாயத் தீவான பெரிமை (Perim) ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி அமைப்பினர் வெள்ளிக்கிழமை சென்றடைந்துள்ளனர்.
முன்னதாக, சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்ற சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசாங்கப் படைகள் பெரிம் தீவிலிருந்து பின்வாங்கியதாகவும், தீவுக்கு எதிரே செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள துபாப் (Dhubab) நகரையும் ஹூதிகள் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஹோர்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz) எதிர்ப்புறத்தில் அமைந்துள்ள பாப் அல்-மந்தெப் நீரிணையை ஹூதிகள் முழுமையாகக் கைப்பற்றினால், அது அமெரிக்காவுடனான போரில் ஈரானுக்குப் பெரும் சாதகமாக அமையும்.
இது சர்வதேச எரிபொருள் விநியோகப் பாதையை முடக்கி, உலகளவில் கச்சா எண்ணெய் விலையைப் பெருமளவில் உயர்த்தக்கூடும்.
செங்கடல் பகுதியில் ஹனீஷ் (Hanish) மற்றும் பெரிம் ஆகிய தீவுகளையும், மோகா (Mocha) மற்றும் துபாப் ஆகிய கடலோர நகரங்களையும் ஹூதிகள் கைப்பற்றியதன் மூலம் செங்கடல் வழியிலான சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் தங்களது பிடியை இறுக்கியுள்ளனர்.
ஈரானுடனான மோதலால் ஹோர்முஸ் நீரிணை முடங்கியதை அடுத்து, உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான சவூதி அரேபியா, செங்கடல் பாதையையே பெரிதும் நம்பியிருந்தது.
சவூதி அரேபியாவின் ‘கிழக்கு-மேற்கு’ எண்ணெய் குழாய்ப் பாதைக்கு அருகே புகை மண்டலம் எழுந்ததை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.
ஹோர்முஸ் பாதையை ஈரான் மூடியதைத் தொடர்ந்து, அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில், தனது கிழக்குக் கரையிலிருந்து செங்கடலுக்கு எண்ணெய் விநியோகத்தை திருப்ப சவூதி அரேபியா இக்குழாய்ப் பாதையையே பயன்படுத்தியது.
ஹூதிகளின் இந்த திடீர் முன்னேற்றம், அமெரிக்காவிற்கு எதிரான போரில் மற்றொரு புதிய முன்னணியைத் திறப்பதற்காக ஈரானிய புரட்சிகரக் காவல்படையின் நேரடி வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஹூதிகள் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் மறுப்பு
இதற்கிடையில், ஹூதிகள் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்துமாறு சவூதி கிரீட இளவரசர் முகமது பின் சல்மான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இரண்டு முறை தொலைபேசியில் வலியுறுத்தியபோதிலும், டிரம்ப் கோரிக்கையை நிராகரித்துவிட்டதாக ‘ஆக்சியோஸ்’ (Axios) ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹூதிகள் மீது உடனடியாக நேரடி ராணுவ நடவடிக்கை எடுக்கும் எண்ணம் அமெரிக்க நிர்வாகத்திற்கு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










