நாமல் ராஜபக்சவின் கைது நடவடிக்கையைத் தங்களது கட்சி அரசியல் பழிவாங்கலாகவே கருதுவதாகவும், இதற்கு எதிராக சர்வதேச சமூகத்திடமும் மனித உரிமைகள் அமைப்புகளிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இது குறித்து விளக்கமளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
“போதிய சான்றுகள் இன்றி, நபரொருவர் வழங்கிய வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தங்களது அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்காகவே சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.
எனவே, இது தொடர்பாக அனைத்து மனித உரிமைகள் அமைப்புகள், சட்ட ரீதியான அமைப்புகள் மற்றும் ஜனநாயக நாடுகளிடம் முறையிடவுள்ளோம். இதன் முதற்கட்டமாகவே மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்று, அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடினோம்.
நாமல் ராஜபக்ச எந்தத் தவறும் செய்யவில்லை என்றே நாங்கள் கூறுகின்றோம். அவர் தவறிழைத்திருந்தால், உரிய சான்றுகளின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால், இங்கு எவ்விதச் சான்றும் இல்லை. வெளிநாட்டில் உள்ள நபரொருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இவ்வாறு நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதனால்தான் இதனை முழுமையான அரசியல் பழிவாங்கல் என்று கூறுகின்றோம்,” என சாகர காரியவசம் தெரிவித்தார்.










