கடந்த ஆகஸ்ட் மாதம் தனது நிலத்தில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, தனது வளர்ப்பு கழுதையைச் சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரி மீது ஜோர்ஜியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஆகஸ்ட் 29 அன்று காணாமல் போன 12 வயது சிறுவனைத் தேடி பொலிஸார் ராக்மார்ட் (Rockmart) பகுதியில் உள்ள Hannah Israel என்பவரின் நிலத்திற்கு வந்துள்ளனர்.
நில உரிமையாளரின் அனுமதியின்றியும், அவருக்குத் தெரிவிக்காமலும் வேலிகட்டப்பட்ட புல்வெளிக்குள் பொலிஸார் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தேடுதலின் போது, ட்ரென்டன் கார்னர் (Trenton Garner) என்ற பொலிஸ் அதிகாரி, ‘ஹீஹா’ (HeeHaw) என்ற பெயருடைய தனது இளம் மற்றும் சாதுவான கழுதையைச் சுட்டுக் கொன்றதாக ஹன்னா குற்றஞ்சாட்டியுள்ளார்.
செப்டம்பர் 11 அன்று அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் உரிமைப் புகாரில், வாரண்ட் இன்றி தனது நிலத்திற்குள் நுழைந்த பொலிஸ் அதிகாரி, எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாத தனது வளர்ப்புப் பிராணியைச் சுட்டுக் கொன்றதாக ஹன்னா தெரிவித்துள்ளார். இது சட்டவிரோத தேடுதல் மற்றும் சொத்து பறிமுதல் தொடர்பான அரசியலமைப்புப் பாதுகாப்பை மீறும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அதிகாரப்பூர்வ சம்பவ அறிக்கையில் பொலிஸ் அதிகாரி கார்னர் வேறுவிதமாகக் கூறியுள்ளார். அந்தப் பிராணி பொலிஸாரைத் தாக்க வந்ததாகவும், அதைத் தடுக்க டேசர் (Taser) கருவியைப் பயன்படுத்தியும் அது நிற்காததால், பயமுறுத்துவதற்காகத் தான் துப்பாக்கியால் ஒருமுறை சுட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் அந்தப் பிராணி குன்றின் மீது ஏறிச் சென்று உயிரிழந்ததாகக் கூறியுள்ளார். ஆனால், கழுதை எங்கு உள்ளது என்பதைத் தெரிவிக்காமல் பொலிஸார் சென்றுவிட்டதாகவும், இருட்டில் தாங்களே தேடி அதைக் கண்டுபிடித்ததாகவும் ஹன்னா தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத தேடுதல், அரசியலமைப்பிற்கு முரணான சொத்து பறிமுதல் மற்றும் உரிய சட்ட நடைமுறையின்றி சொத்து இழப்பு ஏற்படுத்தியமை ஆகிய மூன்று முக்கிய கூட்டாட்சி மீறல்களைச் சுட்டிக்காட்டி, ஹன்னா நடுவர் மன்ற விசாரணை (jury trial), இழப்பீடு, சட்டக் கட்டணங்கள் மற்றும் நீதிமன்றச் செலவுகளைக் கோரியுள்ளார்.
இதற்கிடையில், குறித்த கழுதையின் நினைவாக ஒரு அறக்கட்டளையை நிறுவுவதற்கும், பண்ணையில் உள்ள பிற விலங்குகளைப் பராமரிப்பதற்கும் ஹன்னா ‘GoFundMe’ பக்கத்தைத் தொடங்கினார். நிர்ணயிக்கப்பட்ட 30,000 டாலர் இலக்கைத் தாண்டி, 2,200 பேரிடமிருந்து 1,59,000 டாலருக்கும் அதிகமான நிதியுதவி திரட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஜோர்ஜியா விவசாயத் துறையின் சட்ட அமலாக்கப் பிரிவு சுயாதீன விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், பொலிஸ் அதிகாரி கார்னர் நிர்வாக விடுப்பில் (administrative leave) வைக்கப்பட்டுள்ளார்.










