மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மெக்காவின் புனித வான்வெளிக்குள் நுழையும் முன்னரே, ஹவுதி அமைப்பினரின் ஆளில்லா விமானத்தை (Drone) சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாக சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை மாலை மறித்து அழிக்கப்பட்ட இந்த ஆளில்லா விமானம், ஜூலை 2017-இல் நடத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு மெக்காவைக் குறிவைத்து ஹவுதிகள் நடத்திய இரண்டாவது முயற்சியாகும் என்று செய்தித் தொடர்பாளர் துர்க்கி அல்-மால்கி தெரிவித்துள்ளார்.
ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் கடந்த ஒரு வாரமாக நடத்தி வரும் தாக்குதல்கள், சவூதி அரேபியாவைப் போருக்குள் மேலும் இழுத்துள்ளன.
இஸ்லாத்தின் மிகப்பனிதமான தலங்கள் அமைந்திருக்கும் மெக்கா, ஆண்டுதோறும் நடைபெறும் ஹஜ் யாத்திரையின் முக்கிய மையமாகும். அதன் பாதுகாப்பு என்பது “தாண்டக்கூடாத சிவப்புக்கோடு” (red line) என்று அல்-மால்கி வலியுறுத்தினார்.
இருப்பினும், மெக்காவைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவதை ஹவுதி அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
ஆறு மாதங்களாக நீடிக்கும் அமெரிக்க-ஈரான் போரினால் ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியிலான கப்பல் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சவூதி அரேபியா மீதான இந்தத் தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையை அதிர்ச்சியடைச் செய்துள்ளன.
உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான பாப் எல்-மண்டேப் (Bab el-Mandeb) பகுதியைப் பார்வையிடும் யேமனின் செங்கடல் கடலோரப் பகுதிகளை ஹூதிகள் சமீபத்திய நாட்களில் கைப்பற்றியுள்ளனர்.
இது, ஹோர்முஸ் ஜலசந்தியிலிருந்து மாற்றுப் பாதைக்குத் திருப்பி விடப்பட்ட சவூதியின் எண்ணெய் ஏற்றுமதிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியா மெக்காவிற்குப் பாதுகாப்பு எச்சரிக்கைகளை விடுத்தது. ஆனால், ஹூதி அரசியல் பிரிவின் உறுப்பினர் முகமது அல்- பரா, தங்கள் அமைப்பு மெக்காவைக் குறிவைக்கவில்லை என்றும், இக்குற்றச்சாட்டு “முற்றிலும் பொய்” என்றும் ஹூதிகளால் நடத்தப்படும் SABA செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.










